Published : 18 Apr 2022 01:42 PM
Last Updated : 18 Apr 2022 01:42 PM
புதுடெல்லி: இந்தியாவில் விலைவாசி உயர்வு, பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் வருடாந்திர மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவாக மார்ச் மாதத்தில் 14.55% ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் பணவீக்க விகிதமானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கரோனாவுக்கு பின்பு பொருளாதார சுழற்சி ஏற்பட்டதால் எரிபொருள், மின்சாரம் உள்ளிட்டவற்றின் தேவை அதிகரித்துள்ளதால் பணவீக்கம் உயர்ந்து வருவதாகவும், இதுபற்றி கவலைப்பட வேண்டாம் எனவும் மத்திய அரசு தெரிவித்தது.
சில்லறை பணவீக்கம் அண்மையில் வெளியான நிலையில் மார்ச் மாதத்தில் 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டது. இது 6.95 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக உணவு பணவீக்கமானது மார்ச் மாதத்தில் 7.68 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 5.85 சதவீதமாகவும் இருந்தது.
இந்தநிலையில் மார்ச் மாதத்துக்கான வருடாந்திர அடிப்படையிலான மொத்த பணவீக்க விகிதம் விவரம் வெளியாகியுள்ளது. மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் மார்ச் மாதத்தில் நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து 14.55 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்தவிலைப் பணவீக்கம் தொடர்ந்து 12-வது மாதமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் வருடாந்திர மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 13.11% ஆக இருந்த நிலையில் மார்ச் மாதத்தில் 14.55% ஆக உயர்ந்துள்ளது. முக்கியமாக கச்சா எண்ணெய், பொருட்களின் விலை உயர்வு, காய்கறிகள் விலை அதிகரிப்பு போன்றவை இந்த பணவீக்க உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. தாதுப் பொருள், எண்ணெய், அடிப்படை உலோகங்கள், ரசாயனம் மற்றும் ரசாயனப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, உணவுப் பொருட்கள் மற்றும் உணவு அல்லாத பொருட்கள் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரஷ்யா - உக்ரைன் பதற்றம், சீனாவின் லாக்டவுன் போன்றவையும் மார்ச் மாதத்தில் பணவீக்கம் கூடுதலாக உயர்வதற்கு காரணம் என கூறப்படுகிறது. சர்வதேச அளவிலான தானிய உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சமையல் எண்ணெய் விலை, உரங்கள், ஏற்றுமதி உள்ளிட்டவற்றிலும் சப்ளை சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பணவீக்க விகிதம் உச்சம் தொட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பிப்ரவரியில் மொத்த பணவீக்க விகிதம் 13.11% ஆக இருந்தது. இது கடந்த ஜனவரி மாதத்தில் 12.96 சதவீதமாக இருந்தது. 2021ம் ஆண்டு டிசம்பரில் மொத்தவிலைப் பணவீக்கம் 14.27% என்று இருந்து பின்னர் அது திருத்தப்பட்டு 13.56% என மாற்றப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT