(கோப்புப்படம்)
(கோப்புப்படம்)

கார்களின் விலையை உயர்த்தியது மாருதி சுசுகி நிறுவனம்: இன்று முதல் அமல்

Published on

புதுடெல்லி: தங்கள் நிறுவன கார்களின் விலையை உயர்த்தி உள்ளதாக தெரிவித்துள்ளது மாருதி சுசுகி நிறுவனம். இன்று முதல் புதிய விலையில் கார் விற்பனை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி கடந்த சில மாதங்களாக கார்களின் விலையை உயர்த்திக் கொண்டே வருகிறது. இதற்கு அதிகரித்து வரும் உற்பத்தி செலவே காரணம் எனவும் மாருதி தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய விலை உயர்வு காரணமாக சராசரியாக அனைத்து மாடல் கார்களின் விலையும் 1.3 சதவீதம் (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை) உயர்ந்துள்ளதாக தெரிகிறது.

ஜனவரி 2021 முதல் மார்ச் 2022 வரையில் உற்பத்தி செலவு அதிகரித்து வந்த காரணத்தால் கார்களின் விலையை 8.8 சதவீதம் வரை உயர்த்தியிருந்தது மாருதி. இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் விலையை மீண்டும் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது அதனை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்திய வாகன சந்தையில் ஆல்டோ முதல் எஸ்-கிராஸ் வரை பல்வேறு மாடல் கார்களை மாருதி விற்பனை செய்து வருகிறது. இந்த கார்களின் விலை உயர்வானது மாடலுக்கு மாடல் மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் கடந்த வியாழன் அன்று அனைத்து மாடல்களுக்குமான விலையை 2.5 சதவீதம் உயர்த்தியது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in