Published : 17 Apr 2022 08:12 AM
Last Updated : 17 Apr 2022 08:12 AM
புதுடெல்லி: இந்தியாவுக்கு எஸ் 400 ரக ஏவுகணை பாகங்கள் விநியோகத்தை, ரஷ்யா தொடங்கியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ரகத்தை சேர்ந்த 5 ஏவுகணைகளை வாங்க கடந்த 2018-ம் ஆண்டில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதன்படி கடந்த 2021-ம் ஆண்டில் முதல் ஏவுகணை இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. இந்த ஏவுகணை பஞ்சாப் மாநிலத்தில் நிறுவப்பட்டிருக்கிறது.
இதன்மூலம் சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல்களை எளிதாக எதிர்கொள்ள முடியும். அதாவது சுமார் 400 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி தகர்க்க முடியும். எதிரிகளின் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்க முடியும்.
இந்த சூழலில் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் இரண்டாவது எஸ் 400 ரக ஏவுகணையை விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் எஸ். 400 ரக ஏவுகணையின் பாகங்களை ரஷ்யா விநியோகம் செய்ய தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து முக்கிய பாகங்கள் அனுப்பப்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறும்போது, "சில நாட்களுக்கு முன்பாக ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணையின் பாகங்களை பெற்றுள்ளோம். உக்ரைன் போர் காரணமாக ஏவுகணை பாகங்கள் விநியோகத்தில் சில மாதங்கள் தாமதம் ஏற்படலாம்" என்று தெரிவித்தன.
ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கக்கூடாது, மீறி வாங்கினால் பொருளாதார தடைகளை விதிப்போம் என்று இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து வருகிறது. எனினும் இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நிர்பந்தத்துக்கு அடிபணியாமல் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து ஆயுதங்களை வாங்கி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT