Published : 06 Apr 2022 08:37 PM
Last Updated : 06 Apr 2022 08:37 PM
"பொருளாதாரத்தில் இலவசம் என்று ஒன்று இல்லவே இல்லை. எதுவாக இருந்தாலும் அதற்கு யாரேனும் விலை கொடுக்க வேண்டும்." - 'There’s No Such Thing as a Free Lunch' என்ற தலைப்பு கொண்ட புத்தகத்தை எழுதிய நோபல் பரிசு வென்ற பொருளியல் மேதை மில்டன் ஃப்ரீட்மேன் இப்படிக் கூறியிருக்கிறார். அப்புத்தகத்தில் அவர், "இன்றோ, நாளையோ, அல்லது நாளை மறுநாளோ இலவசம் எனக் கூறப்படும் பொருளுக்கான விலை கொடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு முறை அரசாங்கம் பரிசுகளை குடிமக்களுக்கு அறிவிக்கும்போதும் மக்கள்தான் அதற்கான விலையைச் செலுத்துகிறார்கள். பணக்காரர்கள் அதற்கான பணத்தை தருகிறார்களா என்றால், இல்லை. பெரும்பாலும் ஏழைகள்தான் பரிசுகளுக்கான விலையைக் கொடுக்கிறார்கள். அரசாங்கம் தீப்பெட்டி தொடங்கி வைரம் வரைக்கும் அத்தனைக்கும் வரி விதிக்கிறது. அதனால் இன்றோ, நாளையோ அல்லது நாளை மறுநாளோ இலவசம் எனக் கூறப்படும் பொருளுக்கான விலை கொடுக்கப்பட வேண்டும் என்பதே பொருளாதாரம்" எனக் கூறியிருக்கிறார்.
எப்போதும் தேர்தல் வரும்போதுதான் 'இலவசங்கள்'... இன்னும் நேர்த்தியாகச் சொல்ல வேண்டுமானால் 'விலையில்லா பொருட்கள்' பற்றிய பேச்சுகள் வரும். ஆனால், அண்மையில் பிரதமர் தலைமையில் நடந்த ஓர் ஆலோசனைக் கூட்டத்தில் செயலர் அந்தஸ்து கொண்ட சில அதிகாரிகள் 'இலவசங்களைக் கொடுக்கும் சில மாநிலங்கள் இலங்கையைப் போன்ற பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும்' என்று ஆலோசனை கூறியிருக்கின்றனர். 'ஒரு நாடு அந்நியச் செலாவணியாக திட்டமிடாமல் வாங்கிய கடனால் அனுபவித்துவரும் நெருக்கடி, ஒரு மாநிலம் இலவசங்களை அறிவிப்பதால், கொடுப்பதால் வந்துவிடுமா?' என்ற கேள்வியை இந்த ஆலோசனை எழுப்பாமல் இல்லை.
பிரதமருக்கு அதிகாரிகள் வழங்கியுள்ள அறிவுரை போல் இலவசங்களால் பொருளாதாரம் வீழுமா? இலவசங்களே தேவையில்லையா? இலவசங்களால் உண்மையிலேயே பயன்பெறுவோர் யாருமே இல்லையா? இலவசங்கள் கொடுப்பதில் வரைமுறைகள் வேண்டுமா, அதை நெறிப்படுத்த வேண்டுமா? - இவற்றிற்கெல்லாம் மில்டன் ஃப்ரீட்மேன் பார்வை வழியாக விடை தேடும் முயற்சிதான் இந்தக் கட்டுரை.
உலகமயமாக்கல் ஏற்படுத்திய தாக்கங்கள்... - உலகமயமாக்கலுக்குப் பின் உள்ள இந்த உலகம் ஒரு புதிய உலகம். 1991-க்குப் பின்னர் இந்தியாவும் புதிய இந்தியாவாகத்தான் இருக்கிறது. உலகமயமாக்கல் கொள்கை, வளர்ச்சிகளின் ஊடே எப்படி நாடுகள் ஒன்று மற்றொன்றின் மீது அரசியல், பொருளாதார ரீதியாக தாங்கிவாழ் சூழ்நிலையை உருவாக்கியதோ, அதேபோல் வருவாய் ஏற்றத்தாழ்வுகளும் உருவானது. இந்த வருவாய் ஏற்றத்தாழ்வு வரும்போது மக்கள் மத்தியில் வாங்கும் சக்தி குறைந்து இலவசங்களுக்கான ஆசை உருவாகிறது என்பதுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை.
உலகமயமாக்கல் என்பது சந்தை பொருளாதாரத்தை சார்ந்திருக்கச் செய்கிறது. ஆனால், அந்த சந்தையில் தோல்வி என்ற நிலை உருவானால், அது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்தானே? சந்தைப் பொருளாதாரத்தில் பண்டங்களின் அளிப்பும், தேவையும் சீராக இருக்க வேண்டும். தேவையான பொருட்கள்தான் உற்பத்தியாகிறதா என்ற நிலைமை இருக்க வேண்டும். ஒருபுறம் பொருளுக்கான தேவை இருக்கிறது, ஆனால் மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை. இன்னொருபுறம் பொருளின் அளிப்பு சந்தையில் குவிகிறது; ஆனால் அதை சந்தைப்படுத்த முடியாமல் தொழில் சக்திகள் திணறுகின்றன. இதுதான் சந்தையின் தோல்வி. இந்த சந்தைத் தோல்வியில் மக்களுக்கு தேவைகள் அதிகரிக்கின்றன. அவர்களால் வாங்க முடியாத பொருட்களின் பட்டியல் நீளமாகிறது. இந்த இடத்தில்தான் விலையில்லா பொருட்கள் மாயம் செய்கின்றன.
உலகமயமாக்கலுக்குப் பின் முதலீடுகள் அதிகரிக்கிறது என்பது மறுக்க முடியாதது. ஆனால், முதலீடுகள் எல்லாமே அதற்குத் தகுந்தார்போல் வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்பதே இன்றளவும் நிலைமையாக இருக்கிறது. வேலைவாய்ப்புகள் இல்லாவிட்டால் பசி, வறுமை குறையாது. அங்கே வாங்கும் திறன் எங்கிருந்து வரும்? அப்போதுதான் மக்கள் குறுகிய கால தேவையான இலவசங்களை நோங்குகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக உலகமயமாக்கலை இன்னும் திறன்பட கையாளாத காரணத்தால் வேலைவாய்ப்பின்மை, வருவாய் ஏற்றத்தாழ்வுகள், சந்தைத் தோல்வி போன்ற பல காரணிகள் இன்னும் இலவசங்களை எதிர்நோக்கும் மனப்பான்மையை மக்கள் மத்தியில் வைத்துள்ளது. உலகமயமாக்கல் கொள்கையை சந்தை நிர்வகிக்க முடியாமல் தோல்வியை சந்திக்கும்போது வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் சூழலில் இலவசங்கள் எப்படி வேலை செய்கிறது என்பதை நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.
மூன்று விஷயங்கள் முக்கியம்... - ஈரோடு கலை அறிவியல் கல்லூரி பொருளாதாரத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் பேரா.நா.மணியிடம் இலவசங்கள் பற்றிய நமக்கெழுந்த அத்தனைக் கேள்விகளையும் முன்வைத்தோம். அவர் கூறியதிலிருந்து... "நான் இந்தக் கேள்விக்கான பதிலை நோபல் பரிசு வென்ற பொருளாதார மேதை ஜோசப் ஸ்ட்கிலிட்ஸை மேற்கோள் காட்டி ஆரம்பிக்க விரும்புகிறேன். உலகமயமாக்கலுக்குப் பின்னர் பொருளாதார திட்டமிடுதல்கள் 1% மக்களுக்காக 1% மக்களால் நிர்ணயிக்கப்படுகிறது என்ற பார்வையை முன்வைத்தார். அவர் கூற்றின் சாட்சியை ஏழை, பணக்கார ஏற்றத்தாழ்வில் நாம் காண முடிகிறது. பொருளாதார திட்டமிடலின் குவியம் குறைந்திருப்பதையே அவர் வெளிப்படையாக சொல்லியிருந்தார்.
இந்தப் பின்னணியில் இருந்து நாம் இலவசங்களைப் பார்ப்போம். ஏழைகளிடம் வேலைவாய்ப்பு இல்லை, வருமானம் இல்லை என்ற சூழலில் இலவசங்கள் அவர்களுக்கு முக்கியமாகிறது. தரமான சுகாதாரம், தரமான கல்வி, வேலைக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இவற்றை ஒரு 'நல அரசு' மக்களுக்கு உறுதி செய்ய வேண்டும். ஆனால், இந்த மூன்றும் இப்போது காசு கொடுத்தே வாங்கும் சூழலில் உள்ளது. இந்த மாதிரியான சூழலில், ஏழைகள் இலவசமாக எது கிடைத்தாலும் சரி என்ற நிலைக்கு வருகின்றனர். ஆனால் இந்த இலவசங்கள் மீது நாம் தொடர்ந்து கேள்விகளை முன்வைக்கின்றோம். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் வரிச் சலுகை அறிவிக்கப்படுகிறது; அதை எந்த ஒரு கார்ப்பரேட்டும் இலவசம் என்று சொல்வதில்லை. அதைப் பெறுவதற்கு எவ்வளவு லாபி பண்ண முடியுமோ, அவ்வளவு லாபி செய்கிறார்கள். அப்படி வரிவிலக்கு பெறும் பெரு நிறுவனங்கள் எல்லாம் உற்பத்தியை அதிகரித்து, வேலைவாய்ப்பை அதிகரிக்கிறதா என்றால் அது தனியான விவாதப் பொருளாகவே நீளும்.
ஆனால், ஏழை மக்கள் வாங்கும் இலவசப் பொருட்களின் மீது சுயமரியாதை சாயத்தை சிலர் பூச முற்படுகின்றனர். இலவசங்களை அதனாலேயே இப்போது விலையில்லா பொருட்கள் எனக் கூறுகின்றோம். ஆனால், உண்மையில் ஆராய்ந்து பார்த்தால் இங்கு இலவசம் என்று எதுவுமே இல்லை. இலவசங்களை விற்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தால் கார்ப்பரேட்டுகளையும் கேள்வி கேட்க வேண்டும் அல்லவா?
கரோனா நெருக்கடி காலத்தில் அரிசியிலிருந்து ரேஷனில் கொடுக்கப்பட்ட அத்தனை இலவசப் பொருட்களின் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. இலவசங்களை எல்லாம் விற்கிறார்களா? எல்லாவற்றையும் குடிக்கிறார்களா? என்ற தரவுகள் இல்லை. ஆனாலும் நாம் இலவசங்கள் வீண் என்று பொதுமைப்படுத்துகிறோம். இலவசங்களின் தாக்கங்களை முதலில் மதிப்பீடு செய்ய வேண்டும். சந்தைப் பொருளாதாரம் சீராக திறம்பட செயல்பட வேண்டும், முதலீடுகள் வேலைவாய்ப்புகளை உருவாகிறதா என்று கவனிக்க வேண்டும், கல்வி, சுகாதாரம், திறன் மேப்பாட்டு பயிற்சிகள் மக்களுக்கு இலவசமாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதை எல்லாம் நோக்கி நகர்வதுதான் நல் அரசு. ஆனால், இதை ஒரே நாளில் செய்ய முடியாது. இது ஊழலற்ற ஆட்சியால் உறுதி செய்ய முடியும். அப்படியான சூழல் உருவாகும்போது இலவசங்களுக்கான ஆதரவு படிப்படியாக ஒழியும். இலவசங்களால் பொருளாதாரம் வீழ்ந்துவிடாது. பொருளாதாரத்தை சீர்படுத்தினால் இலவசங்களுக்கான தேவையே இருக்காது. இலவசங்கள்.. இலவசங்கள் என்று எள்ளி நகையாடுவதே அதை வாங்கும் சமூகம் அதைப் பெற கூனிக்குறுக வேண்டும் என்று கொச்சைப்படுத்தும் செயல்" என்று கூறினார்.
நெறிப்படுத்துதல் அவசியம்... - சமூக நலத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி கணேசன் கூறியபோது, "இலவசங்கள் தேர்தல் அரசியலோடு தொடர்புப்படுத்தி பார்க்கப்படும் பொருளாகிவிட்டது. தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே மக்கள் என்ன இலவசமாகக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புக்குச் சென்றுவிடுகின்றனர். என் இளம் காலத்தில் காமராஜர் ஆட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அது இலவசம் தாண்டி ஒட்டுமொத்த தேசத்தின் கவனம் பெற்ற திட்டம். எம்ஜிஆர் காலத்தில் பல் சுத்தமும், கால் சுத்தமும் பல நோய்களைத் தடுக்கும் என்ற சுகாதாரத் துறை பரிந்துரையை ஏற்று பற்பொடியும், காலணியும் கொடுத்தனர். பின்னர் சமையல் எரிவாயு சிலிண்டர், பள்ளிக் குழந்தைகளுக்கு மிதிவண்டி, லேப்டாப் என்ற குறிப்பிடத்தக்க இலவசங்கள் இருக்கின்றன.
ஆனால், இவை ஏற்கெனவே கடன் சுமையை அதிகமாக சுமந்து கொண்டிருக்கும் அரசுக்கு கூடுதல் சுமையை உருவாக்குவதாக இருக்கக் கூடாது. அப்போதுதான் பிரதமருக்கு செயலர்கள் ஆலோசனை கூறியது போல் பொருளாதார நெருக்கடி ஏற்படும். ஆகவே, இந்த இலவசம்தான் அத்தியாவசமானது, அவசியமானது என்று திட்டமிட்டு அதன் டார்கெட் க்ரூப்பை நிர்ணயித்து செயல்படுத்த வேண்டும். இலவசங்களை நெறிப்படுத்தினால், அதைத் தவறாகப் பயன்படுத்துவோர் இருக்க மாட்டார்கள். வீட்டில் பெரிய தொலைக்காட்சி ஒன்றுக்கு இரண்டு வைத்திருந்தவர்கள்; அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வண்ணத் தொலைக்காட்சி என்ற சலுகையால் ஓசியில் கிடைத்ததை டீக்கடைக்கும், சலூன் கடைக்கும் விற்பனை செய்தனர். தேவை இருக்கும் இடத்தை அறிந்து இலவசங்களைக் கொண்டு சேர்ப்பது நலம்" என்றார்.
இலவசங்களின் தேவை இன்றும் இருக்கிறது. பள்ளியில் மதிய உணவு கிடைத்தால்தான் உண்டு என்ற நிலையில் உள்ள குழந்தைகள் இன்றும் இருக்கின்றனர். மிதிவண்டியும், லேப்டாப்பும் இன்னும் பல குழந்தைகளுக்கு அப்படித்தான் இருக்கிறது. மருத்துவத்திலும் இலவசங்களின் அவசியம் இருக்கிறது. எனவே, இலவசங்களை நெறிப்படுத்துவதும், எதிர்காலத்தில் இலவசங்களுக்கான எதிர்பார்ப்பு வராமல் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதுமே மத்தியிலோ, மாநிலத்திலோ உள்ள நல அரசு செய்யக் கூடியது. அதுவரை சலுகைகள் எதிர்பார்க்கப்படும். இந்த எதிர்பார்ப்பு தான் தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கும், தேசிய அரசியலில் பாஜகவுக்கும், வடக்கே ஆம் ஆத்மிக்கும், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி எனப் பலருக்கும் வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறது.
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT