Published : 04 Apr 2022 07:01 PM
Last Updated : 04 Apr 2022 07:01 PM

சமூக வலைதளங்களை கைப்பற்றும் எலான் மஸ்க்? - ட்விட்டரின் 9.2% பங்குகளை வாங்கினார்

எலான் மஸ்க்: கோப்புப் படம்

நியூயார்க்: ட்விட்டர் மீது விமர்சனங்களை முன் வைத்து சமூகவலைதளத்தில் களமிறங்கக்கூடும் என கூறப்பட்ட எலான் மஸ்க் தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார்.

டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியான எலான் மஸ்க் கடந்த மாதம் 25 ஆம் தேதி ட்விட்டரில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினார். அதில், "ஜனநாயகம் செயலாற்ற பேச்சு சுதந்திரம் தேவை. ட்விட்டர் இந்தக் கொள்கையை கடைப்பிடிக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்களா" என கேள்வி கேட்டு இருந்தார். முன்னதாக எலான் மஸ்க் ட்விட்டரின் கொள்கைகள் குறித்து சில விமர்சனங்களையும் வைத்திருந்தார்.

அதற்கு 70% வாக்குகள் இல்லை எனப் பதிவாகியிருந்தது. இதனால் மஸ்க் புதிய சமூக வலைதளத்தை உருவாக்க முடிவு செய்துள்ளாரா என பலரும் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், இது குறித்து நான் தீவிரமாக பரிசீலித்து வருகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

எலான் மஸ்க்கின் புதிய சமூகவலைதள யோசனையை ஆதரித்து சிலர் கருத்து தெரிவித்தனர். ‘‘ட்விட்டரை வாங்கிவிடுங்கள் இல்லாவிட்டால் புதிதாக ஒன்றை உருவாக்குங்கள்’’ என்று பதிவிட்டனர்.

இந்தநிலையில் எலான் மஸ்க் ட்விட்டரில் 9.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார். அவர் சார்பில் பங்குச்சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் சுமார் 73.5 மில்லியன் ட்விட்டர் பங்குகளை வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவர் ட்விட்டரின் மிகப்பெரிய பங்குதாரராக ஆனார். சமூக ஊடகத் துறையை அவர் அசைக்கக்கூடும் என்று தகவல்கள் பரவிய ஒரு வாரத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை மஸ்க் வாங்கிய செய்தி வெளியானதை தொடர்ந்து அதன் வர்த்தகம் சுமார் 26% உயர்ந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x