Last Updated : 04 Apr, 2022 06:10 AM

 

Published : 04 Apr 2022 06:10 AM
Last Updated : 04 Apr 2022 06:10 AM

வாழப்பாடி மண்டிகளில் இருந்து மாதம்தோறும் வடமாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்லும் 3.75 லட்சம் தேங்காய்

வாழப்பாடி மண்டியில் தேங்காய் மட்டை உரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்: கடந்த இரு ஆண்டுக்கு பின்னர் தேங்காய் வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதையடுத்து, வாழப்பாடி மண்டிகளில் இருந்து மாதம்தோறும் 3.75 லட்சம் தேங்காய் விற்பனைக்கு செல்கிறது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாரத்தில் 30-க்கும் மேற்பட்ட தேங்காய் மண்டிகள் உள்ளன.

இங்கு சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தேங்காய்கள் விற்பனைக்கு வருகிறது. முழு மட்டையுடன் மண்டிகளுக்கு கொண்டு வரப்படும் தேங்காய்களில், பாதியளவுக்கு நார் உரிக்கப்பட்டு, பின்னர் அவை லாரிகளில் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது.

கடந்த 2 ஆண்டாக கரோனா தொற்று பரவல் காரணமாக தேங்காய் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது,நாடு முழுவதும் கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருப்பதால், தேங்காய் வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தற்போது, வாழப்பாடி மண்டிகளில் இருந்து வடமாநிலங்களுக்கு தேங்காய் அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுதொடர்பாக தேங்காய் மொத்த வியாபாரி வெங்கடேஷ் கூறியதாவது:

ஆண்டுதோறும் புரட்டாசி தொடங்கி தை வரை மழை மற்றும் குளிர் காலம் என்பதால், தேங்காயில் நீர் இருப்பு குறைந்து முற்றிய தேங்காய் மகசூல் கிடைக்க நாட்கள் அதிகமாகும். இதனால், 6 மாதங்கள் வரை தேங்காய் மகசூல் குறைவாக இருக்கும்.

மாசி தொடங்கி ஆனி வரை கோடையில் தேங்காய்களில் நீர் இருப்பு குறைந்து, முற்றிய தேங்காய் மகசூல் விரைவாக கிடைக்கும்.

தற்போது, முற்றிய தேங்காய் விளைச்சல் அதிகரித்து, மண்டிகளுக்கு வரத்து கூடியுள்ளது. மேலும், கரோனா கட்டுப்பாடு நீக்கத்தால், தேங்காய் தேவைகள்பல்வேறு வகையில் அதிகரித்துள்ளது. இதனால், மீண்டும் தேங்காய் வர்த்தகம் விறுவிறுப் படைந்துள்ளது.

வாழப்பாடி மண்டிகளில் இருந்து, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு கடந்த காலங்களில் மாதம் தோறும் லாரிகளில் 8 முதல் 10 லோடு (2.50 லட்சம் தேங்காய்கள்) விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது, மாதம் 15 லோடு வரை (3.75 லட்சம் தேங்காய்) அனுப்பப்படுகிறது. மகசூல் அதிகரிப்பால் ஒரு தேங்காய் ரூ.8 வரை விலை குறைந்துள்ளது.

இதனால், வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், கரோனா காலத்தை விட, வர்த்தக சுழற்சி அதிகரித்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x