Published : 02 Apr 2022 04:01 PM
Last Updated : 02 Apr 2022 04:01 PM

ரஷ்யாவில் இயங்கிவரும் அலுவலகத்தை மூட இன்ஃபோசிஸ் திட்டம்

மாஸ்கோ: பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ், ரஷ்யாவில் இயங்கி வரும் தங்களது நிறுவனத்தின் அலுவலகத்தை மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்து இன்று 38 நாட்கள் ஆகியுள்ளது. இந்த ராணுவ நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ரஷ்யாவில் தங்களது வணிகம் சார்ந்த செயல்பாடுகளை உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் நிறுத்திக் கொண்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இன்ஃபோசிஸ் நிறுவனம், தமது ரஷ்ய அலுவலகத்தை மூடுவது தொடர்பாக அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாக தெரிகிறது.

மாஸ்கோவில் உள்ள தங்களது நிறுவன ஊழியர்களுக்கு மாற்று வேலையை கண்டறியும் முயற்சியை இன்ஃபோசிஸ் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவியவரான நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷிதா மூர்த்தியை பிரிட்டன் நாட்டு நிதியமைச்சரான ரிஷி சுனக் கடந்த 2009-இல் திருமணம் செய்து கொண்டார். இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகளில் சுமார் 400 மில்லியன் பவுண்ட் அளவில் ரிஷி சுனக் மனைவிக்கு சொந்தமாக உள்ளது. இதனால் ரஷ்யாவிலிருந்து ஆதாயம் பெற்று வருவதாக அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அப்போது கூட தனக்கும், இன்ஃபோசிஸுக்கும் தொடர்பு ஏதும் இல்லை என அவர் தெரிவித்திருந்தார்.

பல லட்சம் உக்ரைன் மக்கள் இந்தப் போரினால் தங்களது உடமைகளை இழந்து வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இதுவரை சுமார் 1000 பேர் இந்த போரில் மாண்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகின்றன. உலக நாடுகள் பலவும் பொருளாதார ரீதியிலான தடையை ரஷ்யா மீது அமல்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x