Published : 02 Apr 2022 12:10 PM
Last Updated : 02 Apr 2022 12:10 PM
புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து ஏற்கெனவே குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கத் தொடங்கி விட்டோம், எங்கள் நாட்டின் நலனுக்கு தான் முதலிடம் கொடுப்போம், தள்ளுபடியில் கிடைத்தால் ஏன் வாங்கக்கூடாது என அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷ்யா முன் வந்துள்ளது.
போருக்கு முந்தைய விலையில் ஒரு பீப்பாய்க்கு 35 டாலர்கள் வரை தள்ளுபடியில் முதன்மையான உரல்ஸ் தரத்திலான கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு ரஷ்யா விற்பனை செய்கிறது. டாலர் இல்லாமல் ரூபிள்- ரூபாய் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்படும். ஆனால் இந்தியாவின் இந்த முடிவை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் விமர்சித்து வருகின்றன. உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு இந்தியா உதவுவதாக கூறியிருந்தன. இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கத் தொடங்கியுள்ளோம். ரஷ்யாவுடனான வர்த்தகம் தொடரும். இந்தியாவின் ஒட்டுமொத்த நலனையும் மனதில் வைத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். முதல்கட்டமாக 3-4 நாட்கள் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85% இறக்குமதி மூலம் பூர்த்தி செய்கிறது.
நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மிகத் தெளிவாக விளக்கினோம். எங்கள் நாட்டின் நலனுக்கு தான் முதலிடம் கொடுப்போம், கச்சா எண்ணெய் விஷயத்தில் இந்தியாவின் தேவைக்கே முதலிடம் கொடுப்போம். கச்சா எண்ணெய் குறைந்த விலையில் கிடைக்கும் போது, தள்ளுபடியில் இருந்தால், நாம் ஏன் அதை வாங்கக்கூடாது. எங்கள் மக்களுக்கான தேவை இது. ரஷ்யாவிடம் இருந்து நாங்கள் ஏற்கெனவே வாங்கத் தொடங்கி விட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT