Published : 29 Mar 2022 04:57 PM
Last Updated : 29 Mar 2022 04:57 PM
புதுடெல்லி: விமான நிறுவனங்கள் அறிவிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதை தடுக்க சில வழித்தடங்களில் விமான கட்டணங்களை விமான போக்குவரத்து இயக்குநரகம் கண்காணித்து வருவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் டாக்டர். வி.கே.சிங் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
விமான கட்டணங்கள் அரசால் ஒழுங்குமுறைப்படுத்தப்படவில்லை. விமான போக்குவரத்து 1937-ன் விதிகளின் கீழ் விமான நிறுவனங்கள் நியாயமான கட்டணத்தை தாங்களாகவே நிர்ணயித்துக் கொள்ளலாம். விமான கட்டணங்கள், விமான நிறுவனங்களின் இணையதளங்களில் வெளியிடப்படுகின்றன.
கூடுதல் கட்டணம், திடீர் கட்டண உயர்வு ஆகியவற்றை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கவும், விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் விமான போக்குவரத்து சுற்றறிக்கையை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் வழித்தடம் வாரியாக, பல பிரிவுகளின் கீழ் சந்தை நிலவரப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றையும் விமான நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் தெரிவிக்க வேண்டும்.
விமான நிறுவனங்கள் அறிவிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணங்களை வசூலிக்காததை உறுதி செய்ய, சில வழித்தடங்களின் விமான கட்டணங்களை விமான போக்குவரத்து இயக்குநரகம் ஒவ்வொரு மாதமும் கண்காணிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT