Published : 28 Mar 2022 08:06 AM
Last Updated : 28 Mar 2022 08:06 AM
புதுடெல்லி: இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சர்வதேச விமான சேவையை இந்தியா நேற்று தொடங்கியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டு இறுதியில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இந்தியாவிலும் கரோனா பரவத் தொடங்கியதும் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 2020 மார்ச் 23-ம் தேதி முதல் சர்வதேச விமானங்கள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கிடையே, கரோனா தொற்று கட்டுக்குள் வந்த பிறகு சில நாடுகளுக்கான விமான சேவை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
இந்நிலையில் தற்போது கரோனா பரவல் பெருமளவு குறைந்துள்ளதால், 2 ஆண்டுகளுக்குப் பிறகு, வழக்கமான சர்வதேச விமான சேவை நேற்று மீண்டும் தொடங்கியுள்ளது. 27 நாடுகளில் உள்ள 43 இடங்களுக்கு வாரத்துக்கு மொத்தம் 1,466 விமானப் புறப்பாடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்று மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கோடை கால அட்டவணைப்படி, இந்தியாவில் இருந்து வாரத்துக்கு 3,200-க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடுகள் இருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
100 சதவீத பயணிகள் அனுமதி
மேலும், அனைத்து சர்வதேச விமானங்களிலும் 100 சதவீத பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளனர். கரோனா பரவல் குறைந்துள்ளதால் விமான பணிக் குழுவினர் கரோனா தடுப்புக்கான சிறப்பு கவச உடைகளை அணியத் தேவையில்லை என்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், மருத்துவ அவசரத் தேவைகளுக்காக 3 இருக்கைகளை காலியாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முகக் கவசம் அணிந்து சானிடைசரால் கைகளை சுத்தம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால்
சானிடைசர், என்-95 முகக் கவசம் ஆகியவற்றை பயணிகள் எடுத்துச் செல்லலாம். முன்னெச்சரிக்கையாக கவச உடைகளையும் கொண்டு செல்லலாம்.
வெளிநாட்டினருக்கு விசா
இதற்கிடையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் இம்மாத தொடக்கத்தில் இருந்து புதிய விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் சர்வதேச விமான போக்குவரத்து காலதாமதமாக நேற்று தொடங்கியுள்ளது. இல்லாவிட்டால் முன்கூட்டியே இந்தியாவின் சர்வதேச விமான சேவை தொடங்கியிருக்கும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நேற்று கூறும்போது, “இந்தியாவில் இருந்து வாரத்துக்கு 1,466 விமானங்களின் புறப்பாடு இருக்கும். அதே நேரத்தில் வெளிநாட்டு சர்வதேச விமானச் சேவை நிறுவனங்கள் வாரத்துக்கு 1,783 விமானங்களை இந்தியாவுக்கு இயக்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT