Published : 18 Mar 2022 06:33 PM
Last Updated : 18 Mar 2022 06:33 PM
புதுடெல்லி: ரஷ்யாவிடம் மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ஆர்வம் காட்டி வரும் நிலையில் அமெரிக்காவின் விமர்சனத்துக்கு இந்தியா மறைமுகமாக பதிலளித்துள்ளது. ஒப்பந்தத்தை அரசியலாக்கக் கூடாது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தங்கள் அரசியலாக்கப்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா மீது கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது .
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷ்யா முன் வந்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவும் ஆயத்தம் ஆகி வருகிறது. முதல்கட்டமாக 30 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் வாங்க இந்தியன் ஆயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதனை இந்தியா வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கருத்து தெரிவித்து இருந்தார். உக்ரைனை ஆக்கிரமித்துள்ள ரஷ்யா மீதான அமெரிக்கத் தடைகளை மீறுவது இல்லை என்று தெளிவுபடுத்தும் அதே வேளையில் இது ரஷ்ய படையெடுப்பிற்கு ஆதரவாக இருக்கும் என்று அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில் ‘‘இந்த நேரத்தில் வரலாற்றுப் புத்தகங்கள் எழுதப்படும் போது நீங்கள் எங்கு நிற்க விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றியும் சிந்தியுங்கள். ரஷ்ய தலைமைக்கான ஆதரவு என்பது வெளிப்படையாக ஒரு பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு படையெடுப்பிற்கான ஆதரவாகும்’’ என்று சாகி கூறினார்.
வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை வாங்குவதை நிராகரிக்கவில்லை என்று கூறியருந்தார். இந்தநிலையில் அமெரிக்காவின் கருத்துக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முறையான எரிசக்தி பரிவர்த்தனைகள் அரசியலாக்கப்படக் கூடாது இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கச்சா எண்ணெய் தன்னிறைவு கொண்ட நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது வர்த்தக தடை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. இந்தியாவின் முறையான எரிசக்தி பரிவர்த்தனைகள் அரசியலாக்கப்படக்கூடாது.
இந்தியா எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ளது. கச்சா எண்ணெய் தேவையில் கிட்டத்தட்ட 85 சதவீதம் (ஒரு நாளைக்கு 5 மில்லியன் பீப்பாய்கள்) இறக்குமதி செய்யப்பட வேண்டும். பெரும்பாலான இறக்குமதிகள் மேற்கு ஆசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
எரிசக்தி ஆதாரங்களை பொறுத்தவரையில் போட்டி சூழ்நிலைகளில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். அனைத்து தயாரிப்பாளர்களிடமிருந்தும் இதுபோன்ற சலுகைகளை வரவேற்கிறோம். இந்திய வர்த்தகர்களும் உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் இதுபோன்ற சிறந்த வாய்ப்புகளை ஆய்வு செய்கின்றனர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT