Published : 17 Mar 2022 05:16 PM
Last Updated : 17 Mar 2022 05:16 PM
புதுடெல்லி: பிற நாட்டு பதிவு எண் கொண்ட தனிநபர் வாகனங்களுக்கான விதிமுறைகள் 2022-ன் வரைவு அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அரசு செய்திக் குறிப்பு: பிற நாடுகளில் பதிவுசெய்யப்பட்ட தனிநபர் வாகனங்களை இந்தியாவில் ஓட்டுவதை முறைப்படுத்துவதை இந்த விதிமுறைகள் வகை செய்கிறது. வெளிநாட்டு பதிவு கொண்ட வாகனங்களை இந்தியாவில் இயக்குவதற்கு கீழ்காணும் ஆவணங்களை வைத்திருப்பது அவசியமாகும்.
> செல்லத்தக்க பதிவு சான்றிதழ்
> செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் அல்லது சர்வதேச ஓட்டுநர் அனுமதி (எது பொருத்தமோ அது)
> செல்லத்தக்க காப்பீட்டு பாலிசி
> செல்லத்தக்க மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் (வாகனம் தயாரிக்கப்பட்ட நாட்டுக்கு பொருந்தினால்)
மேற்குறிப்பிடப்பட்ட ஆவணங்கள் ஆங்கிலத்தை விடுத்து பிறமொழியில் இருந்தால் அதிகாரபூர்வமான ஆங்கில மொழிப் பெயர்ப்பையும், அசல் ஆவணங்களுடன் வைத்திருக்க வேண்டும்.
இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் வாகனங்களை பதிவு செய்திருந்தாலும், அந்த வாகனங்களில் உள்ளூர் பயணிகள், சரக்குகளை இந்திய எல்லைக்குள் ஏற்ற அனுமதிக்கப்பட மாட்டாது.
இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களை, இந்திய மோட்டார் வாகனச்சட்டம் 1988-ன் 118-வது பிரிவின் கீழ் உள்ள விதிமுறைகள் கட்டுப்படுத்தும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT