Published : 17 Mar 2022 04:30 AM
Last Updated : 17 Mar 2022 04:30 AM
கோழி முட்டை விலை சரிவை தடுக்க பண்ணைகளில் உள்ள வயது முதிர்ந்த சுமார் 1 கோடி கோழிகளை விற்பனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க அலுவலக வளாகத்தில் கோழித்தீவன பகுப்பாய்வு மையம் மற்றும் கோழி இறைச்சி மற்றும் முட்டை விற்பனை நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் டாக்டர் செல்வராஜ் ஆய்வு மையத்தை திறந்து வைத்து, முட்டை விற்பனையை தொடங்கிவைத்தார்.
இதில், பங்கேற்ற தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சிங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாமக்கல் மண்டலத்தில் சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகிறது. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 5.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டம் மற்றும் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
கடந்த ஓராண்டாக கோழித் தீவனத்தின் மூலப் பொருட்களான மக்காச் சோளம், சோயா புண்ணாக்கு உள்ளிட்டவைகளில் விலை கடுமையாக உயர்ந்து தீவன உற்பத்திச் செலவு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், முட்டையின் விலை குறைந்து வருகிறது. இதனால், பண்ணையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், கோழிகளுக்கு அயர்ச்சி ஏற்பட்டு முட்டை உற்பத்தி குறையும். அதே நேரம் முட்டை விற்பனையும் குறையும் அபாயம் உள்ளது. எனவே, வயது முதிர்ந்த கோழிகளை பண்ணைகளில் தொடர்ந்து வளர்த்தால் மேலும் நஷ்டம் அதிகரிக்கும்.
எனவே, பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளில் 80 வாரங்களுக்கு மேல் வயது முதிர்ந்த கோழிகளை விற்பனை செய்வது நல்லது. பண்ணைகளில் உள்ள சுமார் 1 கோடி வயது முதிர்ந்த கோழிகளை விற்பனை செய்வதன் மூலம் முட்டை உற்பத்தியை குறைத்து முட்டைக்கு நல்ல விலை பெற முடியும். இதனால், பண்ணையாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தையும் குறைக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், சங்க செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் இளங்கோ, துணைத் தலைவர்கள் கீ.நாகராஜன், சண்முகம், துணைச் செயலாளர் ஆனந்த், இணைச் செயலாளர் சசிக்குமார், முட்டை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT