Published : 23 Apr 2014 10:00 AM
Last Updated : 23 Apr 2014 10:00 AM
இந்திய பொருளாதார வளர்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர் களின் (என்ஆர்ஐ) பங்களிப்பு அபரிமிதமானது என்று லார்ட் ஸ்வராஜ் பால் குறிப்பிட்டார்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பு டெல்லியில் திங்கள்கிழமை இரவு ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்து கொண்டு பேசுகையில், கடந்த 6 மாதத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் இந்தியாவுக்கு 6,500 கோடி டாலர் (சுமார் ரூ. 4 லட்சம் கோடி) வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டிலிருந்து இப்போதுவரை இந்தியாவில் நிதி நெருக்கடி நிலவுகிறது. இந்திய வங்கிகள் வாராக் கடன் அதிகரிப்பால் தத்தளிக்கின்றன. இருப்பினும் ரிசர்வ் வங்கி விடுத்த வேண்டுகோளை ஏற்று கடந்த ஆறு மாதங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மேற்கொண்ட சேமிப்புத் தொகை மிகவும் அதிகம் என்றார்.
என்ஆர்ஐகளின் பங்களிப்பு கணிசமாக இருந்தபோதிலும் அதற்கு உரிய அங்கீகாரத்தை இந்திய அரசு அளிக்கவில்லை என்று அவர் மன வேதனையுடன் குறிப்பிட்டார். 1990-ம் ஆண்டுகளில் இந்தியாவில் தாராளமயக் கொள்கை பின்பற்றப்பட்டபோது இந்தியாவில் முதலீடுகளைத் தொடங்கியது வெளிநாடு வாழ் இந்தியர்கள்தான் என்று குறிப்பிட்டார். வெளிநாட்டில் வாழும் இந்தியர்களையும் தங்கள் நாட்டவர்களாகக் கருத வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவை பெருமையடையச் செய்த சமூகம் என்று குறிப்பிட்டால் அது வெளிநாடு வாழ் இந்தியர்கள்தான் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலைப் பற்றி பேசிய அவர், இந்திய வாக்காளர்களை லஞ்சம் கொடுத்து வாங்க முடியாது என்றார். இங்குள்ள செய்தி பத்திரிகைகள் அல்லது ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஊடகங்கள் இந்திய வாக்காளர்கள் லஞ்சம் பெற்று வாக்களிப்பதாகக் கூறினாலும் அவை அனைத்தும் தவறானவை. எது எப்படியிருந்தாலும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது வாக்காளர்கள்தான். இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. இங்கு வாக்காளர்கள் எண்ணிக்கையும் அதிகம். இந்த அளவுக்கு அதிக வாக்காளர்கள் எந்த மேலை நாடுகளிலும் கிடையாது என்று குறிப்பிட்டார்.
அரசியல் கட்சிகள் உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக கல்வி, வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் வளத்தை எது மேம்படுத்தும் என்பதை உணர்ந்து அதைச் செயல்படுத்த வேண்டும் என்றார்.
ஆனால் எந்த அரசியல் கட்சியும் கல்வியைப் பற்றியோ, நாட்டில் வாழும் மக்களின் நிலை குறித்தோ இங்கு நிலவும் வறுமை குறித்தோ பேசுவதில்லை. எனவே இத்தகைய சூழலில்தான் வாக்காளர்கள் இந்த விஷயங்கள் குறித்து அரசியல் கட்சிகள் பேசும்படி நிர்பந்திக்க வேண்டும். ஆனால அவ்விதம் ஏன் செய்யவில்லை என்பது தெரியவில்லை. ஆனால் என்றாவது ஒரு நாள் நல்லது நடக்கும் என்றார். இந்தியாவின் கல்வித் தரத்தை சர்வதேச அளவுக்கு மேம்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.
பிரிட்டனில் செயல்படும் கேபரா குழும நிறுவனத் தலைவரான ஸ்வராஜ் பால், வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடுகளை ஊக்குவிப்பதில் மிக முக்கிய பங்காற்றி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT