Published : 15 Mar 2022 01:31 PM
Last Updated : 15 Mar 2022 01:31 PM
புதுடெல்லி: உக்ரைன் போரைத் தொடர்ந்து புதிய திருப்பமாக ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ஆயத்தமாகி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி முதல்கட்டமாக 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்க இந்தியன் ஆயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா மீது கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது .
கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் ஒரு பீப்பாய் 100 டாலர், 110 டாலர் என விலை உயர்ந்தது. முன்பேர வர்த்தகத்தில் 120 டாலர், 130 டாலர் என தொடர்ந்து ஏற்றம் கண்டது. உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி 24-ம் தேதி தாக்குதல் தொடங்கிய பிறகு தற்போது 40% வரை உயர்ந்துள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். ரஷ்யாவின் அனைத்து கச்சா எண்ணெய் இறக்குமதியையும் படிப்படியாக நிறுத்த இருப்பதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.
கச்சா எண்ணெய்; கோலோச்சும் நாடுகள்
இந்த அறிவிப்பு கச்சா எண்ணெய் விலையை மேலும் உயர்த்தும் என அச்சம் எழுந்துள்ளது. உலக அளவில் மூன்று மிகப்பெரிய நாடுகள் கச்சா எண்ணெய் சந்தையில் கோலோச்சுகின்றன.
உலக அளவில் கச்சா எண்ணெய் உலகில் அமெரிக்கா 18 முதல் 19% வரை பங்குகளை கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா நாடுகள் தலா 12% பங்குகளைக் கொண்டுள்ளன.
ரஷ்யாவின் உலக அளவிலான கச்சா எண்ணெய் ஏற்றுமதி 12 சதவீதம் ஆகும். ஒவ்வொரு நாளும் உலக சந்தையில் கிட்டத்தட்ட 5 மில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய்களை ரஷ்யா விநியோகம் செய்கிறது. குறிப்பாக ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா அதிகஅளவில் கச்சா எண்ணெய் விநியோகம் செய்கிறது.
ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷ்யா முன் வந்துள்ளது. பொருளாதார தடை காரணமாக இந்தியா உட்பட மற்ற நாடுகள் இதனை வாங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.
அமெரிக்கா எச்சரிக்கை
இதுமட்டுமின்றி ரஷ்யாவிடம் வர்த்தக உறவு வைத்துக் கொள்ளும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா ஏற்கெனவே எச்சரித்துள்ளது. ஆனால் சீனா இந்த கச்சா எண்ணெயை வாங்க தயார் என அறிவித்தது.
இந்தநிலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்வ வாங்க இந்தியாவும் ஆயத்தம் ஆகி வருகிறது. முதல்கட்டமாக 30 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் வாங்க இந்தியன் ஆயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதனை இந்தியா வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
அமெரிக்க செனட் உறுப்பினர் வெளியிட்டுள்ள கருத்தை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் நிறுவனம் இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளது. அதில் ‘‘ரஷ்யாவிடம் இருந்து இந்தியா முடிந்தவரை விலகி இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் வற்புறுத்தினர். பொருளாதாரத் தடைகள் மூலம் ரஷ்யாவை தனிமைப்படுத்த மேற்கத்திய நாடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்திய அதிகாரிகள் பேச்சு
ஆனால் கச்சா எண்ணெய் மற்றும் பிற பொருட்களை தள்ளுபடியில் வாங்குவதற்கான ரஷ்ய சலுகையை இந்தியா ஏற்க வாய்ப்புண்டு. இரண்டு இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதை உறுதி செய்துள்ளனர். இந்தியா அதன் முக்கிய வர்த்தக கூட்டாளியுடன் தொடர்ந்து வணிகம் செய்ய விரும்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயுதங்கள், வெடிமருந்துகள், ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் என அனைத்திற்கும் ரஷ்யாவை இந்தியா அதிகம் நம்பியிருக்கிறது’’ என செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் போரில் இந்தியா ஏற்கெனவே நடுநிலை வகித்து வருகிறது. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வாக்கெடுப்பு நடந்தபோது இந்தியா நடுநிலை வகித்து புறக்கணித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT