Published : 14 Mar 2022 12:32 PM
Last Updated : 14 Mar 2022 12:32 PM
புதுடெல்லி: எல்ஐசி ஐபிஓ இந்த நிதியாண்டு முடியும் மார்ச் 31-ம் தேதி வரை வெளியிடப்பட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
எல்ஐசியில் 5% பங்குகளை விற்று ரூ.78,000 கோடி நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்படும் எனத் தெரிகிறது.
இதில் 50% நிறுவன முதலீட் டாளர்களுக்கும், 35% சில்லறை முதலீட்டாளர்களுக்கும் 10% எல்ஐசி பாலிசிதாரர்களுக்கும் ஒதுக்கப்பட இருப்பதாகவும், 5% தள்ளுபடி வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு பங்கும் ரூ.10 முகமதிப்பு கொண்டிருக்கும். மொத்தம் 31.62 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படும். இதில் ஊழியர்களுக்கு 5 சதவீதமும், தனிநபர் காப்பீடுதாரர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்படும்.
பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியிடம் பங்குகள் விற்பனை தொடர்பான வரைவு அறிக்கையை (டிஆர்ஹெச்பி) எல்ஐசி தாக்கல் செய்துள்ளது. பொதுப் பங்கு வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் மார்ச் 31-ம் தேதிக்குள் ஐபிஓ மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், உக்ரைன் - ரஷ்யா போர் மூண்டதால் பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்தன. இதையடுத்து, பங்கு விற்பனை தள்ளிப்போகலாம் என தகவல் வெளியானது. தற்போது வரை எல்ஐசி பங்கு விற்பனை தொடர்பான உறுதியான தகவல் தெளிவாகவில்லை. அதேசமயம் மே 12ஆம் தேதி வரை எல்ஐசி பங்கு விற்பனையை தொடங்குவதற்கு அரசுக்கு கால அவகாசம் இருப்பதாக தெரிகிறது.
இந்த நிதியாண்டு முடியும் மார்ச் 31-ம் தேதி வரை எல்ஐசி ஐபிஓ வெளியிடப்பட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பங்குச்சந்தை ஏற்ற- இறக்கமாக இருப்பதால் இதன் காரணமாக எல்ஐசியின் பங்கு வெளியீடு பாதிக்கப்படக் கூடும் என்பதால் மத்திய அரசு பங்கு வெளியீட்டை தாமதிக்கும் என்றே கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT