Published : 04 Mar 2022 08:47 PM
Last Updated : 04 Mar 2022 08:47 PM
புதுடெல்லி: பொதுத்துறை வங்கிகளில் முதன்மையானதாகத் திகழும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ரஷ்ய நிறுவனங்களுடனான அனைத்து பரிவர்த்தனைகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ பரிவர்த்தனைகளை நிறுத்தியுள்ளது.
இதன்படி வங்கிகள், துறைமுகங்கள், கப்பல்கள் உட்பட அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் அல்லது ஐக்கிய நாடுகள் சபைபட்டியலிட்டுள்ள தடை பட்டியலில் இடம்பெற்றுள்ள ரஷ்ய நிறுவனங்களிடையிலான பரிவர்த்தனை நிறுத்தப்பட்டுள்ளதாக எஸ்பிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வங்கி மூலமான பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வந்த நிறுவனங்கள் இதற்குரிய மாற்று வழிகளை கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
ரஷ்யாவில் கமர்ஷியல் இண்டோ பேங்க் எல்எல்சி என்றபெயரில் கூட்டாக வங்கிச் சேவையை எஸ்பிஐ அளிக்கிறது. இந்தக் கூட்டமைப்பில் கனரா வங்கி 40% பங்குகளைக் கொண்டுள்ளது. ஆனால் பரிவர்த்தனை நிறுத்தப்பட்டது குறித்து கருத்து எதையும் வங்கி தெரிவிக்கவில்லை.
இந்தியாவுக்கு பெருமளவு ஆயுதங்களை ரஷ்யா சப்ளை செய்கிறது. இது இரு நாட்டு அரசுகளிடையிலான ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுவ தாகும். நடப்பு நிதி ஆண்டில் இதுவரை இந்தியா - ரஷ்யா இடையிலான வர்த்தக பரிவர்த்தனை அளவு 940 கோடி டாலராகும். கடந்த நிதி ஆண்டில் 810 கோடி டாலராக இது இருந்தது.
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், கனிம எண்ணெய், முத்து, விலை உயர்ந்த கற்கள், அணு மின் உலை, கொதிகலன், இயந்திரம் மற்றும் இயந்திர பாகங்கள், மின் இயந்திரங்கள், உரம் உள்ளிட்டவற்றை இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்தியாவிலிருந்து மருந்து பொருட்கள், மின்சார இயந்திர கருவிகள், இயற்கை ரசாயனங்கள், ஆட்டோமொபைல் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதற்கு முன்பு ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டபோது அங்கிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் சிரமம் ஏற்பட்டது. அதற்கு மாற்று வழியை இந்தியா கண்டுபிடித்து அதன்படி இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு ஈடாக உணவு தானியங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT