Published : 01 Mar 2022 11:06 AM
Last Updated : 01 Mar 2022 11:06 AM
புதுடெல்லி: வர்த்தக உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.105 உயர்த்தப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ம் தேதி தாக்குதல் தொடங்கியது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் கடந்த 25-ம் தேதி 2014-ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக ஒரு பீப்பாய் 100 டாலர்களை தாண்டியது. ஐரோப்பா முழுவதுமே போர் பதற்றம் காரணமாக உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் வர்த்தக உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் வர்த்தக உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.105 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால், 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை டெல்லியில் இன்று முதல் ரூ.2,012க்கு விற்பனை செய்யப்படுகிறது.
5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.27 உயருகிறது. இதன்படி, சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.569க்கு விற்கப்பட உள்ளது.
தமிழகத்தில் வர்த்தக உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50 ஆக விற்கப்பட உள்ளது.
எனினும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் உயர்த்தப்படவில்லை. சிலிண்டர் ஒன்றின் விலை மாற்றமின்றி ரூ.915.50க்கு விற்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT