Published : 14 Feb 2022 10:21 AM
Last Updated : 14 Feb 2022 10:21 AM
மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று (திங்கள்கிழமை) காலை இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது.
காலை 9.27 மணியளவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,256 புள்ளிகள் சரிந்து 56,896.44க்கும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 373.10 புள்ளிகள் வீழ்ந்தும் வர்த்தகமானது.
உக்ரைனால் ஊசலாடும் பங்குச்சந்தைகள்: உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எல்லையில் சுமார் 1 லட்சம் வீரர்களை ரஷ்யா நிறுத்தியுள்ளது.
அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. உக்ரைனின் போக்கு ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிமியா மீது ஆதிக்கம் செலுத்த உக்ரைன் முயல்வதாகவும் ரஷ்யா குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், எந்த நேரத்திலும் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்க, ஜப்பான் எனப் பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை உக்ரைனில் இருந்து வெளியேற அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் பதற்றத்தால் சர்வதேச பங்குச்சந்தைகள் தள்ளாட்டம் கண்டுள்ளன. அதன் தாக்கம் தற்போது ஆசிய பங்குச்சந்தைகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று (திங்கள்கிழமை) காலை இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. இது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகம். ப்ரென்ட் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு $95.56 என்றளவில் உள்ளது. உக்ரைன் எல்லையில் உள்ள ரஷ்ய படைகள் மேலும் முன்னேறும்போது, இந்த விலை பீப்பாய்க்கு $100 என்ற அளவை எட்டும் எனக் கணிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி 17 ஆம் தேதி நிலவரப்படி, சர்வதேச சந்தையில் இந்தியாவிற்கான கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 85.6 அமெரிக்க டாலர் என்றளவில் உள்ளது. இது, கடந்த 2014 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பதிவான அதிகபட்ச உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உக்ரைன் சர்ச்சை மேலும் வலுக்கும்போது, மூன்றாவது காலாண்டில் இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் நிலவரம், ஒரு பீப்பாய்க்கு 120 அமெரிக்க டாலர் என்றளவில் கூட அதிகரிக்கக் கூடும் என்றும் ப்ளூம்பெர்க் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT