Published : 10 Feb 2022 01:36 PM
Last Updated : 10 Feb 2022 01:36 PM
மும்பை: ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகவே நீடிக்கும் என்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக தொடரும் எனவும் மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 2020-ம் ஆண்டு மே 22-ம் தேதி வட்டி வீதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைக்கப்பட்டது. இதன்மூலம் தொடர்ச்சியாக 9வது முறையாக வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடருகின்றன.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆய்வுக்கூட்டம் மும்பையில் கடந்த திங்கட் கிழமை நடைபெறுவதாக இருந்தது. புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவைத் தொடர்ந்து மகாராஷ்டிரா திங்கள்கிழமை துக்கம் அனுசரிப்பதாக அறிவித்ததையடுத்து, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் மூன்று ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டம் இன்று முடிவடைந்தது.
இந்தநிலையில் இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டம் நிறைவடைந்த பின் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நிதிக் கொள்கை குறித்து முடிவு எடுக்கும் 6 பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழு மும்பையில் கூடி விவாதித்தது. இந்தக் கூட்டத்தில் வட்டி விகிதங்களில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. குறுகிய கால கடன் வட்டிவிகிதம் 4%ஆக நீடிக்கிறது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35%ஆக நீடிக்கிறது.
இந்திய பொருளாதாரம் வேகமான வளர்ச்சியை கொண்டுள்ளது. உலகளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. தடுப்பூசி போட்டு கொண்டதால், நோய் பரவல் தடுக்கப்பட்டு பொருளாதாரம் மீட்சி அடைகிறது. தடுப்பூசி இயக்கம், ஆத்ம நிர்பார் போன்ற சிறப்பு நிதி உதவிகளால் இந்திய பொருளாதாரம் மீள்கிறது. இந்தியாவின் ஜிடிபி 7.8 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொருளாதார வல்லுனர்கள் சிலர் ரிசர்வ் வங்கி ரிவர்ஸ் ரெப்போ விகிதம் என அழைக்கப்படும் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கும் விகிதத்தை - 3.35 சதவீதத்தில் இருந்து 3.55 சதவீதமாக உயர்த்தும் என்று தெரிவித்து இருந்தனர். ஆனால் வட்டி விகிதங்களில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT