Last Updated : 09 Apr, 2016 12:01 PM

 

Published : 09 Apr 2016 12:01 PM
Last Updated : 09 Apr 2016 12:01 PM

மானியங்கள் எவ்வளவு?

மாநில அரசு இலவசங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்று வதாக ஒரு பரவலான குற்றச்சாட்டு உண்டு. கடந்த பத்து ஆண்டுகளாக இவ்வாறான குற்றச்சாட்டுக்கு இரண்டு திராவிட கட்சிகளும் உள்ளாகியுள்ளன. தமிழகத்தைப் பார்த்து மற்ற மாநில அரசுகளும் இவ்வாறான இலவசங்களைக் கொடுப்பதாக பலர் கூறுகின்றனர். தேர்தல் நேரத்தில் இலவசங்கள் விவாதப் பொருளாகி உள்ளது.

அரசை பொறுத்தவரை பல பொருட்களுக்கு, சேவைகளுக்கு மானியங்கள் வழங்கி வருகின்றது. ஒரு பொருளின் முழு அடக்க விலைக்கும் மானியம் வழங்கும் போது அப்பொருள் அல்லது சேவை இலவசமாகி விடுகிறது. உதாரணமாக பள்ளி கல்வி முதல் கல்லூரி கல்வி வரை இலவசமாக வழங்கப்படுகிறது. அரிசி தவிர மற்ற உணவு தானியங்கள், சமையல் எண்ணெய் போன்றவை மானிய விலையில், அதாவது, அடக்க விலையில் ஒரு பகுதி மானியமாக அரசு அளிக்க, மற்ற பகுதிக்கு நுகர்வோர் காசு கொடுக்கவேண்டும். வேறுவகையில் சொல்வதானால், ஒரு பொருள் அல்லது சேவை நூறு சதவிகித மானியத்துடன் அளிக்கப்பட்டால் அது இலவசம்.

தமிழக அரசு கடந்த சில வருடங்களாக கொடுத்து வருகின்ற மானியங்களை இங்குள்ள அட்டவணையில் பார்க்கலாம். இவை இல்லாமல் வேறு பல மானியங்களும் கொடுக்கப்படுகின்றன, உதாரணமாக, மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்குதல், தேர்வு கட்டண மானியம், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு, கல்வி, மருத்துவ நிலையங்களுக்கு மானியம், என பல வகை மானியங்கள் உண்டு. இவற்றை பொதுவாக கொடை (grant) என்று அழைப்பர், ஆகவே அவை இங்கு சேர்க்கப்படவில்லை.

இங்குள்ள அட்டவணையில் எவை எல்லாம் தேவை அல்லது தேவை இல்லை என்று நாம் நிர்ணயிக்கவேண்டும்.

எல்லோருக்கும் பொது விநியோக கடைகள் மூலம் மாதம்தோறும் இலவச அரசி வழங்குவது தேவையற்றது என்றால், அதனை யாருக்கு வழங்கவேண்டும், அவர்களை எப்படி இனம் காண்பது என்பதில் பல சிக்கல்கள் உண்டு. தேசிய அளவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளில், தமிழகத்தில் வறுமை விகிதம் குறைவாக இருப்பதற்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் ஒரு முக்கிய காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ஒரு கிலோ இலவச அரிசி வழங்க ரூ.2௦ செலவானால், அதில் பெரும் பகுதி மத்திய அரசும், மீதம் உள்ளதை மாநில அரசும் மானியமாக வழங்குகின்றன என்பதை அறியவேண்டும். இந்த திட்டத்தில் அரசு பணம் விரயமாவதை தடுக்கவும் நடவடிக்கை தேவை.

அட்டவணை 1

மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி (லேப்டாப்) வழங்குவது தேவையற்றது, அவற்றை மாணவர்கள் விற்றுவிடுவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் இன்றைய நவீன சூழலில் மடிக் கணினி மிக அவசியமான ஒன்று. அதை அவர்கள் பயன்படுத்தும் விதமாக மேல் நிலைப் பள்ளியில் சேரும் போது கொடுத்து, கணினி கல்வியை கட்டாய பாடமாக்கவேண்டும். இன்று எல்லா பள்ளிகளுக்கும் இன்டர்நெட் வசதி இருப்பதால், தேர்வுகள் கூட கணினி வழியாக நடத்த வேண்டும். இவ்வாறு செய்வதால், கணினி பயன்பாடும், கல்வி கற்றலும் மேம்படும்.

இலவச ஆடு, மாடு கொடுக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 1970களில் ஒருங்கிணைந்த கிராம மேம்பாட்டு திட்டத்தில் இந்த ஆடு, மாடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, அதனின் பயன்பாடு முழுமையாக பயனாளிகளுக்கு சென்றடையவில்லை என்று கைவிடப்பட்டது. எனவே, இவ்வாறான இலவசங்களை வழங்கும் திட்டங்களை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

இவை எல்லாம் அரசால் நேரடியாக வழங்கப்படும் மானியங்கள் / இலவசங்கள். இவை இல்லாமல் நகராட்சிகள் நடத்தும் உணவு விடுதிகள் (அம்மா உணவகம்) குடிநீர் விநியோகம், போன்றவற்றில் அந்தந்த நகராட்சிகளின் மானிய செலவுகள் உண்டு. தமிழக அரசு போக்குவரத்து நிறுவனங்கள் விற்பனை செய்யும் “பாட்டில் குடிநீர்”, தமிழ்நாடு உப்பு நிறுவனம் விற்பனை செய்யும் ‘அம்மா உப்பு’ என்பனவற்றில் இந்த அரசு நிறுவனங்களின் மானிய செலவுகள் உள்ளன என்பதை அறியவேண்டும். எனவே, அரசின் நிதி நிலையில் இல்லாத பலவகை மானியங்களும் வழங்கபடுகின்றன.

இலவசங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்ற கேள்வி எழுகிறது? வரி வருவாய் அதிகரிப்பது ஒரு வகையில் இலவசங்களுக்கு செலவு செய்ய உதவும். ஆனால், அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படாமலேயே இருப்பதும் கூடுதல் நிதி அளிக்க உதவும்.

அட்டவணை 2

இவை மட்டுமல்லாமல் வேறு பல திட்டங்களில் கூட ஒதுக்கப்பட்ட தொகையில் எல்லாவற்றையும் செலவு செய்யாமல், மீதம் உள்ள தொகையை மற்ற திட்டங்களுக்கு செலவு செய்யலாம். இந்த முறை ஒவ்வொரு ஆண்டும் எல்லா அரசுகளாலும் செயல்படுத்தப்படும் ஒரு நிதி மேலாண்மை முறை.

இதை எல்லாம் கருத்தில் கொண்டு, எந்த இலவசங்களை நிறுத்துவது, எந்த திட்டத்தில் மானியங்களை குறைப்பது, இவற்றினால் எவ்வளவு வருவாய் கூடுதலாகக் கிடைக்கும் என்று ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஆராய்ந்து முடிவு செய்து, தேர்தல் அறிக்கை தயாரிக்கவேண்டும்.

இராம. சீனுவாசன் - தொடர்புக்கு seenu242@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x