Published : 02 Feb 2022 04:40 PM
Last Updated : 02 Feb 2022 04:40 PM
மும்பை: மத்திய பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன.
உலகம் முழுவதும் கரோனா தாக்கத்தால் பொருளாதாரம் பற்றிய கவலை நிலவி வருகிறது. பல்வேறு நாடுகளும் தொழில்துறைக்கு ஊக்கம் தரும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தைகளும் கடந்த 10 மாதங்களாக கடும் ஏற்றத்தில் இருந்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்தது.
தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. மேலும் ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கை நீட்டித்தும் வருகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கமான சூழல் நிலவுகிறது.
இதன் எதிரொலியாக கடந்த டிசம்பர் மாதத்தில் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. பின்னர் சற்று ஏற்றம் கண்டது. இந்திய பங்குச்சந்தைகள் கடந்த மாதம் கடும் சரிவை சந்தித்தன.
இந்தநிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன் பிறகு நேற்று பங்கு சந்தை நல்ல ஏற்றத்தினை கண்டது. நேற்றைய வர்த்தக நேர முடிவில் 848 புள்ளிகளுடனும், நிஃப்டி 227 புள்ளிகள் அதிகரித்தும் முடிவடைந்தன.
இதனை தொடர்ந்து இன்று பட்ஜெட் தாக்கலுக்கு பின்பும் பங்குச் சந்தை ஏற்றத்துடன் சந்தைகள் தொடங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 695 புள்ளிகள் அதிகரித்து 59,558 புள்ளிகளில் நிறைவடைந்தது. இதுபோலவே தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 203 புள்ளிகள் அதிகரித்து 17,780 புள்ளிகளாகவும் இன்று வர்த்தகத்தை முடித்துக் கொண்டன.
கோடக் மஹிந்திரா வங்கி பங்கு நிஃப்டியில் 2.79 சதவீதம் உயர்ந்து ரூ. 1,934.80 ஆக உயர்ந்தது. பஜாஜ் ஃபைனான்ஸ், ஐஷர் மோட்டார்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை லாபம் ஈட்டியுள்ளன.
மாறாக, டெக் மஹிந்திரா, பிரிட்டானியா, அதானி போர்ட்ஸ் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ் ஆகியவை நஷ்டமடைந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT