Published : 31 Jan 2022 02:02 PM
Last Updated : 31 Jan 2022 02:02 PM
வரும் நிதியாண்டுக்கான (2022- 2023) மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்யவுள்ளார். பெருந்தொற்று காலத்தில் மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளுக்கும் மூலதன செலவு என்பது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி கரோனா 2-ம் அலைக்கு பின்னர் பொருளாதார சுழற்சி மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் அதனை வேகப்படுத்த வேண்டிய பெரும் தேவையும் உள்ளது. இந்த சூழலில் மத்திய பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் மத்திய பட்ஜெட் குறித்து நிதி ஆலோசகர் சோம.வள்ளியப்பனை தொடர்பு கொண்டு பேசினோம். பட்ஜெட் எதிர்பார்ப்பு குறித்து அவர் கூறியதாவது:
மத்திய பட்ஜெட்டை பொறுத்தவரையில் வருமான வரியில் செய்யக்கூடிய மாற்றங்கள் எப்போதும் பெரிதும் எதிர்பார்ப்பாக இருக்கும். அந்தவகையில் இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டிலும் இதே எதிர்ப்பார்ப்பு உள்ளது. கடந்த ஆண்டே ‘ஓல்டு ரெஜிம், நியூ ரெஜிம்’ என 2 திட்டங்களாக மாற்றப்பட்டு விட்டது. இருந்தாலும் 5 லட்சத்துக்கு குறைவாகவும் வரி விதிக்கும் திட்டமும் உள்ளது. பணவீக்கத்துக்கு ஏற்ப 10 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இதுமட்டுமின்றி 80சி என்ற விரி விலக்கு உச்ச வரம்பு 1.5 லட்சமாகவே நீண்டகாலமாக உள்ளது. மத்திய அரசு தனக்கான பல திட்டங்களில் பணவீக்கத்தின் அடிப்படையில் உச்ச வரம்புகளை மாற்றியுள்ளது. பிஎப், இஎஸ்ஐ என பலவற்றிலும் உச்ச வரம்புகள் மாற்றப்பட்டுள்ளன. ஆனால் 80சி திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படவில்லை. இதை இந்த ஆண்டு செய்தே ஆக வேண்டும் என்ற பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. அதனால் எனவே அதற்கான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறலாம்.
தங்கத்தை பொறுத்தவரையில் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதுபோலவே பொதுவாக தங்கத்துக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. ஆனால் குறைவான கிராம்களில் தங்கம் வாங்கும் மக்களுக்கும் இந்த சங்கடத்தை ஏற்படுத்துகிறது. எனவே குறைவான கிராம்களுக்கு ஜிஎஸ்டி வரி நீக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இதுதவிர, தொழில்துறையைினருக்கு வரி குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கடன் கிடைக்க வேண்டும் என்ற எதிர் பார்க்கிறார்கள். விவசாயிகள் புதிய திட்டம் வேண்டும் என எண்ணுகிறார்கள். இதற்கு ஏற்ப திட்டங்கள் இடம் பெறலாம்.
சிறு, குறு விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டு தற்போது அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோலவே பயிர் காப்பீட்டு திட்டம் போன்றவற்றிக்கான ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஜிஎஸ்டியை பொறுத்தவரையில் அதற்கான அதிகாரம் ஜிஎஸ்டி கவுன்சிலிடம் சென்று விட்டது. அதனால் இதுபற்றிய அறிவிப்புகளை பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாது.
அதேசமயம் ஜிடிபி எனப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி எந்த அளவு இருக்கும் என பார்க்க வேண்டும். அடுத்த ஆண்டு 10 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என நான் நம்புகிறேன். அப்படி இருந்தால் செலவழிப்பதற்கான தொகையும் மத்திய அரசிடம் இருக்கும். அதையொட்டி பட்ஜெட் ஒதுக்கீடும் இருக்கும். பொதுவாக மத்திய தர வர்க்கத்துக்கும், அதற்கு கீழ் இருப்பவர்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. எதிர்பார்ப்பு என்பதை விட தேவை உள்ளது. எனவே அதனை நிறைவேற்றும் விதமாக இந்த பட்ஜெட் இருக்கும் என நானும் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT