Published : 28 Jan 2022 03:17 PM
Last Updated : 28 Jan 2022 03:17 PM
புதுடெல்லி: கூகுள் ஏர்டெல் நிறுவனத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நீண்டகால ஒப்பந்தமாக ரூ.7,500 கோடியை (1 பில்லியன் டாலர்) முதலீடு செய்துள்ளது.
சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் இந்திய டெலிகாம் நிறுவனங்களின் முதலீடு செய்வது மூலம் டிஜிட்டல் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சேவை அளித்து வர்த்தகத்தைப் பெற முடியும் எனத் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.
இதற்காக ஸ்மார்ட்போனுக்காகக் கூகுள் சிறப்பு ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. கூகுள் - ஜியோ இணைந்து சமீபத்தில் உருவாக்கிய மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போனை மக்கள் மத்தியில் பெரிய அளவில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஏர்டெல்லுடன் ஜியோ இணைந்து செயல்படவுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,500 கோடியில் கூகுள் முதலீடு செய்யவுள்ளது.
இந்த முதலீடு ஏர்டெல்லில் 1.28% பங்குகளை வாங்க 700 மில்லியன் டாலர்கள் மற்றும் டெல்கோவின் டிஜிட்டல் சலுகைகளை மேம்படுத்த பல ஆண்டு வர்த்தக ஒப்பந்தங்களுக்கு 300 மில்லியன் டாலர்கள் வரை ஒதுக்கப்படும்.
இதில், ஒரு பங்கின் விலை ரூ.734 என்கிற கணக்கில் ரூ.5,200 கோடியை ஏர்டெல் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு, 5ஜி இணையம், எதிர்காலத்தில் நெட்வொர்க் விரிவுப்படுத்தல் போன்ற திட்டங்களுக்காக கூகுள் நிறுவனம் நேரடியாக முதலீடு செய்துள்ளது.
தற்போது பார்தி ஏர்டெல் - கூகுள் முதலீட்டு கூட்டணி மூலம் இந்தியாவில் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம், 5ஜி சேவை, இதர முக்கிய டெலிகாம் சேவைகளை வழங்க உள்ளது. இதேபோல் இந்தியாவில் கிளவுட் சேவையை மேம்படுத்துவதிலும் ஏர்டெல் மற்றும் கூகுள் இணைந்து செயல்பட உள்ளது.
இதுகுறித்து ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் பாரதி மிட்டல் கூறுகையில் ‘‘ஏர்டெலின் எதிர்கால இணையம், டிஜிட்டல் தளங்கள், விநியோகம் உள்ளிட்ட இந்தியாவின் டிஜிட்டல் அமைப்பின் எல்லையை விரிவுப்படுத்த கூகுளுடன் நெருக்கமாகப் பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இதுகுறித்து கூறுகையில் ‘‘இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்களை அதிகரிக்க ஏர்டெலுடன் இணைந்துள்ளோம். குறிப்பாக, 5 ஜி இணையத்தின் மூலம் உருவாகும் பல புதிய தொழில்களுக்கு உறுதுணையாகவும், உதவியாகவும் எங்கள் நிறுவனம் துணையாக இருக்கும் ’’ என கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியான உடனே பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் 1.68 சதவீதம் அதிகரித்து 719.05 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 752.80 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT