Published : 27 Jan 2022 10:07 PM
Last Updated : 27 Jan 2022 10:07 PM

இந்த ஆண்டும் காகிதம் இல்லா மத்திய பட்ஜெட்: பிப்.1-ல் தாக்கல்; செயலி மூலம் அறியும் வசதி

இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும், பிப்ரவரி 1ம் தேதி காகிதம் இல்லா முறையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இரண்டாவது முறையாக காகிதம் இல்லா முறையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டை பொதுமக்கள் தங்களின் மொபைல் போன்களில் செயலி மூலம் பார்க்கும் வகையில் மத்திய அரசு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ல் தொடங்க உள்ளது. ஜனவரி 31-ல் குடியரசுத் தலைவர் உரையும் அதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கலும் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா 3-வது அலைக்கு மத்தியில் இந்தக் கூட்டத் தொடர்தொடங்குவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரு நாளில் வெவ்வேறு ஷிப்டுகளில் கூடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பட்ஜெட் அறிக்கையை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி காகிதம் இல்லா முறையில் தாக்கல் செய்யவுள்ளார். பட்ஜெட் அறிக்கையின் இறுதி கட்ட நடவடிக்கையை குறிக்கும் வகையில், இதன் தயாரிப்பில் ஈடுபட்ட நிதியமைச்சக ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. வழக்கமாக இந்தப் பணி அல்வா தயாரிப்புடன் நடைபெறும். இந்தாண்டு பெருந்தொற்று சூழலை கருத்தில் கொண்டு, சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதற்காக அல்வா தயாரிக்கும் விழாவுக்கு பதிலாக இனிப்புகள் வழங்கப்பட்டன.

பட்ஜெட் அறிக்கையின் ரகசியத்தை பராமரிக்க, பட்ஜெட் அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள், நிதி நிலை அறிக்கை வெளியாகும் வரை, பட்ஜெட் பிரஸ் அமைந்துள்ள நார்த் பிளாக் கட்டிடத்திலேயே தங்கியிருகின்றனர். நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்பே, இந்த அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியும்.

வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக, மத்திய பட்ஜெட் கடந்த ஆண்டு முதல் முறையாக காகிதம் இல்லா முறையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, பட்ஜெட் அம்சங்களை தெரிந்துகொள்ள வசதியாக செயலியும் (மொபைல் ஆப்) நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்காக ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு பட்ஜெட்டும் அந்த செயலி மூலமாக தெரிந்துகொள்ள முடியும்.

இந்த செயலியில், பட்ஜெட் உரை, ஆண்டு நிதிநிலை அறிக்கை, மானிய கோரிக்கைகள், நிதி மசோதா என 14 விதமான ஆவணங்களை அரசியல் சாசனத்தில் பரிந்துரைத்துள்ளபடி முழுமையாக பார்வையிடலாம். ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் இந்த செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளத்தில் கிடைக்கிறது. இந்த செயலியை (www.indiabudget.gov.in) என்ற இணையளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும். பட்ஜெட் ஆவணங்களை, இந்த இணையளத்தில் பொதுமக்களும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x