Last Updated : 27 Apr, 2016 10:19 AM

 

Published : 27 Apr 2016 10:19 AM
Last Updated : 27 Apr 2016 10:19 AM

ஈரான், சவூதி அரேபியா இடையே போட்டி: கச்சா எண்ணெய் விலை மேலும் சரியும்

சவூதி அரேபியா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் சரியும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரான் மீதான பொருளாதார தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது வளத்தைப் பெருக்கிக் கொள்ள கச்சா எண்ணெய் உற்பத்தியை ஈரான் அதிகரித்துள்ளது. அதேபோல ஈரானின் போட்டி நாடான சவூதி அரேபியாவும் உற்பத்தியை அதிகரித்து வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை குறையும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை செவ்வாய்கிழமை சரிந்துள்ளது. பிரன்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 44.37 டாலர் என்ற விலையில் வர்த்தகமானது. இது முந்தைய விலையைக் காட்டிலும் 11 சென்ட் குறைவாகும். அமெரிக்க சந்தையில் 12 சென்ட் குறைந்து ஒரு பீப்பாய் விலை 42.52 டாலர் என்ற விலையில் வர்த்தகமாகியுள்ளது.

முன் தினங்களில் சரிவிலிருந்து மீண்டு வர்த்தகமான கச்சா எண்ணெய் விலை செவ்வாய்க்கிழமை மீண்டும் சரியத் தொடங்கியது. டாலருக்கு நிகரான சர்வதேச கரன்சிகளின் மதிப்பு சரிந்ததும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

இது தொடர்பாக பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவன தலைமை செயலர் பாப் டட்லி கூறுகையில், கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்து சப்ளை குறையும்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் சந்தை சமநிலையை எட்டும். இத்தகைய சூழல் இந்த ஆண்டு இறுதியில் ஏற்படலாம் என்றார். ஆனால் சவூதி அரேபியாவும், ஈரானும் போட்டி போட்டுக் கொண்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் பட்சத்தில் இத்தகைய சூழல் ஏற்பட வாய்ப்பில்லை என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சவூதி அரேபியாவின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ஆராம்கோ சமீபத்தில் 7.30 லட்சம் பேரல் கொண்ட கப்பலை சீனாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பியதிலிருந்தே அதன் உற்பத்தித் திறனை புரிந்துகொள்ள முடியும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

சவூதி அரேபியா நாளொன்றுக்கு 5 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை கூடுதலாக விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. சவூதி அரேபியாவின் தினசரி உற்பத்தி ஒரு கோடி பேரலாகும்.

ஈரானின் பொருளாதார தடைக்கு முந்தைய உற்பத்தி நாளொன்றுக்கு 40 லட்சம் பேரலாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x