Published : 17 Jan 2022 03:58 PM
Last Updated : 17 Jan 2022 03:58 PM

மீண்டும் வீட்டில் இருந்தே பணி: கரோனா 3-வது அலையால் திட்டத்தை மாற்றிய ஐ.டி. நிறுவனங்கள்

புதுடெல்லி: நாடுமுழுவதும் கரோனா மூன்றாவது அலை தொடங்கி இருக்கும் இந்த நேரத்தில் மீண்டும் ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் வீட்டில் இருந்தே பணிபுரியும்படி கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா வைரஸ் முதல் அலையைவிட கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை ஏற்பட்ட 2-வது அலையில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர், ஆயிரக்கணக்கில் உயிரிழந்தனர்.

கரோனா பரவல் அதிகமாக இருந்த காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது பல நாடுகளில் வீட்டில் இருந்து வேலைபார்க்கும் வசதியும் அதற்கான தேவையும் ஏற்பட்டது. உலக அளவில் பல நிறுவனங்களும் பணியாளர்களும் அதைக் கடைபிடித்து வருகின்றனர்.


ஆனால், தடுப்பூசி செலுத்தும் அளவு அதிகரித்தபின் கரோனா தொற்றின் அளவு படிப்படியாகக் குறைந்தது. இதனால் 2-ம் அலை ஓய்ந்த பிறகு இதன் தாக்கம் தொழில்துறையிலும் காணப்பட்டது. நேர்மறையான எண்ணங்கள் தொழில் துறையில் ஏற்பட்டது.

இதனால் கார்ப்பரேட் உலகம் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்து வந்து பணியாற்ற முழு பலத்துடன் தயாராகின. அதாவது வீட்டிலிருந்து வேலை என்ற கருத்து முடிவுக்கு வருவதாக இருந்தது. கணிசமான ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதால் நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்தன.

நெஸ்லே இந்தியா, டாடா நுகர்வோர் தயாரிப்பு, ஆம்வே, டாபர், கோத்ரேஜ் போன்ற சில முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சில நாட்கள் வீட்டிலிருந்து வேலை, சில நாட்கள் அலுவலகத்தில் இருந்து வேலை என்ற அடிப்படையில் பணியாற்ற முடிவு செய்தன.

ஐ.டி. நிறுவனங்கள் 2022-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வருமாறு ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்க தயாராக இருந்தன.

இந்த சூழலில் நாடுமுழுவதும் மீண்டும் கரோனா அலை தொடங்கியுள்ளது. 3-வது அலையில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாதபோதிலும் பரவல் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இதனால் நாடுமுழுவதும் கரோனா மூன்றாவது அலை தொடங்கி இருக்கும் இந்த நேரத்தில் மீண்டும் வீட்டில் இருந்தே பணிபுரியும் சூழல் தீவிரமடைந்துள்ளது.

சில ஐ.டி நிறுவனங்கள் கரோனா 3-வது அலை ஓயும்வரை வீட்டிலிருந்தே வேலை பார்க்க கூறியுள்ளன. டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே அலுவலகங்களுக்கு வந்து பணிபுரியும் படியும், மற்றவர்கள் வீடுகளில் இருந்தே பணிபுரியும் படியும் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

‘‘மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலையடுத்து மாறி வரும் சுகாதார நிலையைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கையான அணுகுமுறையை எடுத்துள்ளோம்’’’ என இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுபோலவே வேறு சில ஐடி நிறுவனங்களும் ஜனவரி மாதம் முதல் தங்கள் ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைக்க திட்டமிட்டிருந்த நிலையில் அதனை ஒத்திவைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x