Published : 13 Jan 2022 03:10 PM
Last Updated : 13 Jan 2022 03:10 PM
டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்பதில் இந்திய அரசுடன் முரண்பாடு நிலவுவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். "நிறைய சவால்களை எதிர்கொள்கிறோம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்கு மிகவும் பிரபலமானது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட அந்நிறுவனம், அதன் இந்தியப் பிரிவுக்கானப் பெயரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூருவில் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து பெங்களூருவில் டெஸ்லா நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிக்கான அலுவலகம் அமைக்கப்பட்டது. அலுவலகம் அமைக்கப்பட்டு பணிகள் தொடங்கினாலும், இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள் அதிகமாக இருப்பதாக எலான் மஸ்க் அதிருப்தி தெரிவித்தார்.
தொடர்ந்து எலெக்ட்ரிக் கார்கள் மீதான இறக்குமதி வரியைக் குறைக்குமாறு வலியுறுத்தி வருகிறது டெஸ்லா. தற்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்கள் மீது 60% முதல் 110% வரை இந்தியாவில் வரி விதிக்கப்படுகிறது. காப்பீடு, போக்குவரத்து செலவு உள்ளிட்ட அனைத்தையும் சேர்க்கும்போது ஒரு காரின் விலை 40,000 டாலராக (ரூ.30 லட்சம்) உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு டெஸ்லா நிறுவனம் கடிதமும் எழுதியது.
அந்தக் கடிதத்தில் "110% வரை வரி விதிப்பதால் இறக்குமதி கார் 40,000 டாலரை எட்டி விடுகிறது. முற்றிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறைந்த இந்த கார்களுக்கு ஒரே நிலையான வரியாக 40% வரியை விதிக்கலாம். வரி குறைப்பு நடவடிக்கையால் இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது" என்றும் டெஸ்லா குறிப்பிட்டது.
தற்போது, பிரனாய் பத்தோல் என்ற ட்விட்டர் பயனர், எலான் மஸ்க்கை குறிப்பிட்டு, "டெஸ்லா இந்தியாவில் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த அப்டேட் ஏதேனும் உள்ளதா? டெஸ்லா மிகவும் அற்புதமான வாகனம். மேலும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் இருக்க தகுதியான வாகனம் அது" என்று கேள்வியுடன் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், "இந்திய அரசுடன் இன்னும் நிறைய சவால்களை எதிர்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டு முதலே டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்க விரும்பினார் மஸ்க். ஆனால் வரி விதிப்பு முட்டுக்கட்டையாக வர, அதனைதொடர்ந்து டெஸ்லா நிர்வாகமும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற இந்திய வர்த்தக மாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, டெஸ்லா உடன் அதிகாரபூரவ பேச்சுவார்த்தையில் பங்கேற்றார் என்பதும், அந்த பேச்சுவார்த்தையில் "அரசிடமிருந்து எத்தகைய உதவியை எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரிவித்தால் அதை முழுவதுமாக அளிக்க அரசு தயாராக உள்ளது" என்று தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT