Published : 12 Jan 2022 01:43 PM
Last Updated : 12 Jan 2022 01:43 PM
புதுடெல்லி: வரும் நிதியாண்டுக்கான (2022- 2023) மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். கரோனா கட்டுப்பாட்டுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்படி நடைபெறும் என்ற அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை.
எனினும் பட்ஜெட் தொடர்பாக நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் என்பது பொதுமக்கள், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் என பல தரப்பினரிடையே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும்.
பட்ஜெட் தொடர்பாக முதல்வர்கள், துணை முதல்வர்கள், மாநில நிதி அமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
மிக மோசமான பெருந்தொற்று காலத்தின் போது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு கடன் வாங்கும் வரம்புகளை அதிகரித்தல், மாநிலங்களுக்கு மீண்டும் கடன்களை வழங்குதல், மூலதன செலவினங்களுக்கான சிறப்பு உதவி உள்ளிட்டவை குறித்து மாநில அளவில் ஆலோசனைகள் வந்தன. இதுபோலவே தொழில்துறையினர், வர்த்தக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் என பல தரப்பினருடனும் அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
பட்ஜெட்டில் வருவாய் பட்ஜெட், மூலதன பட்ஜெட் என இரண்டு பகுதிகள் உண்டு. வருவாய் பட்ஜெட்டில் வருவாய் வரவு மற்றும் வருவாய் செலவுகள் பற்றிய தகவல்கள் இருக்கும். மூலதன பட்ஜெட்டில் மூலதன வரவு மற்றும் மூலதன செலவு பற்றிய தகவல்கள் இருக்கும்.
பெருந்தொற்று காலத்தில் மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளுக்கும் மூலதன செலவு என்பது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி கரோனா 2-ம் அலைக்கு பின்னர் பொருளாதார சுழற்சி மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் அதனை வேகப்படுத்த வேண்டிய பெரும் தேவையும் உள்ளது.
எனவே தொழில்துதுறையினர் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் உள்ளன. அதை ஈடுகட்டும் வகையில் மத்திய அரசும் பல்வேறு முன் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறது.
அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தினை முன்னதாகவே அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடு சற்று குறைய வாய்ப்புள்ளது. அதுபோன்ற சூழலில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்க நடவடிக்கை தொடர்பான சில அறிவிப்புகள் இடம் பெறலாம்.
வட்டி விகிதம்:
இதுமட்டுமின்றி இந்தியாவிலும் நீண்டகாலமாக வட்டி விகிதம் அதிகரிக்கப்படவில்லை. எனவே மத்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதங்களை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. அவ்வாறு வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டால் அதற்கு ஏற்ப தொழில்துறையினருக்கு பண சுழற்சி கிடைப்பதில் சிக்கல் எழாமல் இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி வங்கி தவிர மற்ற முதலீடுகள் குறையும் வாய்ப்பையும் தவிர்க்க வேண்டும். எனவே அதற்கான சலுகைகள், சில நிதியுதவி அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறவாய்ப்புண்டு.
தொற்று நோய், வேலை இழப்பு மற்றும் வருமானம் சரிவு உள்ளிட்ட பலவும் சாமனிய மக்களை மீண்டும் பாதிக்க தொடங்கியுள்ளது. சாமனிய மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.
விருந்தோம்பல் துறை எனப்படும் சுற்றுலா, ஓட்டல்கள் உள்ளிட்ட துறை சார்ந்த நிறுவனங்கள் கரோனா காலத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அந்த துறையை ஊக்கு விக்கும் வகையில் சில அறிவிப்புகள் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. வரி குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை அதுறையினர் எதிர்பார்க்கின்றனர்.
கார்ப்பரேட் முன்பதிவுகள் மற்றும் எம்ஐசிஇயை ஐஜிஎஸ்டியின் கீழ் வர கொண்டு வர அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனங்கள் ஜிஎஸ்டி உள்ளீடு கிரெடிட்டைப் பெற உதவும். இது உலகளாவிய சுற்றுலா பயணிகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளை தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக இந்தியாவில் தங்கள் சுற்றுலா திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
இதுமட்டுமின்றி பல அமைச்சகங்கள் குறைவான ஒதுக்கீட்டைப் பெற வாய்ப்புள்ளது. இருப்பினும், இது குறிப்பிட்ட ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட சற்று அதிகமாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT