Published : 23 Jun 2014 11:20 AM
Last Updated : 23 Jun 2014 11:20 AM
பாதுகாப்பு விளிம்பு என்பது முதலீட்டில் மிக மிக முக்கியமான ஒன்று. முதலீட்டில் ஈடுபடுவதற்கு முன்பு, பலருக்கு இதைப் பற்றி அதிகம் தெரிவதில்லை. பாதுகாப்பு விளிம்பில் முதலீடு செய்தவர்கள் பணத்தை இழப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு, இதை ஆங்கிலத்தில் (Margin of Safety) என்று சொல்வார்கள்.
நாம் முதலீட்டைத் தொடங்குவதற்கு முன்பு அந்த முதலீடு கடந்த காலங்களில் எவ்வாறு செயல்பட்டுள்ளது வரும் காலங்களில் எவ்வாறு செயல்படும் என்று பார்க்க வேண்டும்.
பாதுகாப்பு விளிம்பு என்பது இன்று ரியல் எஸ்டேட் முதலீடுகளில் கொஞ்சம் கூடக் கிடையாது. சாதாரண வீட்டு மனை கூட கடந்த 10 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது. இப்போது வாங்கினால் நாம் பலன் அடைவதைவிட, பணத்தை இழக்க வேண்டிய வாய்ப்புகள்தான் அதிகம். 2003 மற்றும் 2004 ம் ஆண்டுகளில் பாதுகாப்பு விளிம்பு மிக அதிகமாக இருந்தது, அன்று முதலீடு செய்தவர்கள் அனைவரும் இன்று நல்ல நிலையில் உள்ளார்கள்.
முதலீடுகள் சுழற்சிக்கு உட்பட்டவை. எந்த ஒரு முதலீடும் எல்லா கட்டங்களிலும் நன்றாக செயல்படாது. நம் வாழ்க்கையைப் போல முதலீடுகள் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை. அது இயற்கையின் நியதி; நாம் கேள்வி கேட்க முடியாது, அதை உணர வேண்டும். அந்த முதலீட்டு வாய்ப்பு தற்போதுதான் ஆரம்பித்துள்ளதா, இல்லை முடிவுக்கு வந்துள்ளதா என்பதை அறிவது மிக எளிது.
ஒரு முதலீட்டைப் பற்றி அனைவரும் பேசத் தொடங்கினால், அது முடிவுக்கு வந்துவிட்டது. அந்த முதலீடு வரும் காலங்களில் நன்றாக செயல்படாது, மாறாக பலருக்கு ஒரு முதலீட்டு வாய்ப்பின் பேரில் நம்பிக்கை இல்லை, அதனால் அதைப் பற்றி யாரும் பேசவில்லை என்றால், சத்தம் போடாமல் நாம் அந்த முதலீட்டில் முன்பே நுழைந்து விடவேண்டும்! இதற்கு ஆங்கிலத்தில் (Early Mover Advantage) என்று பெயர்.
பாதுகாப்பு விளிம்பை எப்படி அறிந்து கொள்வது என்றால் அந்த முதலீடு கீழே விழுவதற்கான வாய்ப்புகள் எவ்வளவு, மேலும் எத்தனை சதவிகிதம் என்று சற்று உள்நோக்கி பார்க்க வேண்டும். உதாரணமாக பங்குச் சந்தை 2008 ஜனவரி மாத தொடக்கத்தில் சென்செக்ஸ் 20870 புள்ளிகள்.
அது 2003 முதல் 6.5 மடங்கு வரை உயர்ந்துள்ளது. 5 வருடங்களில் 6.5 மடங்கு என்பது மிக மிகப் பெரியது. இங்கு பாதுகாப்பு என்பது துளி கூட கிடையாது மாறாக ரிஸ்க்தான் அதிகம், பலர் 2008ல் முதலீடு செய்து, இன்னும் அது வளரவில்லை என்று கூறுகிறார்கள்.
ஒரு நிகழ்வின் மூலம் நாம் என்ன கற்று கொண்டோம் என்பது மிக முக்கியம். தற்போது 6 வருடங்களுக்கு மேலாக அதே முதலீடு வெறும் 20% தான் உயர்ந்துள்ளது. கணக்கிடும்போது அது வருடத்திற்கு 3% கூட கூட்டு வட்டியில் உயரவில்லை.
இப்போது, இந்த முதலீட்டில் பாதுகாப்பு விளிம்பு மிக மிக அதிகம். 3 முதல் 5 வருடம் காத்திருக்க முடிந்தால் மியூச்சுவல் ஃபண்டிலோ அல்லது உங்களுக்கு நேரம் மற்றும் அனுபவம் இருந்தால் நேரடியாக பங்குச் சந்தையிலோ முதலீடு செய்யலாம். மேலும் பங்குச் சந்தை மதிப்பு என்பது அதில் உள்ள நிறுவனங்களின் செயல்பாட்டை பொறுத்தது, நீண்ட கால முதலீட்டில் உத்தேச பேரம் (Speculation) என்பது கிடையாது.
அதே வேளையில் தங்கம் அல்லது ரியல் எஸ்டேட் முதலீடுகள் கடந்த காலங்களில் கொஞ்சம் கூட குறையவில்லை. கடந்த 5 முதல் 10 வருடங்களை ஒப்பிடும்போது. இங்கு பாதுகாப்பு விளிம்பு என்பது கொஞ்சமும் இல்லை. இதைத் தவிர்ப்பது நல்லது, அதிகம் ரிஸ்க் விரும்புபவர் அதை உணர்ந்து எடுப்பது நல்லது.
முன்பே சொன்னதுபோல உத்திரவாத வட்டி என்பது 8% முதல் 10% வரைதான். ஆனால் சிலரோ அல்லது சிறிய நிறுவனமோ நாங்கள் கார் பிசினஸ், பங்குச் சந்தையில் டெரிவேட்டிவ் டிரேடிங், ஈமு கோழி வளர்க்கிறோம் என பல வகைகள், வந்த வண்ணம் இருக்கின்றன. அவர்களும் ரூம் போட்டு யோசித்து விதம் விதமாய் ஏமாற்றுகிறார்கள். நாமும் அதில் விட்டதை, இதில் பிடித்து விடலாம். இது ஓரளவிற்கு நம்பிக்கையாகத் தெரிகிறது, மாதத்திற்கு 4 முதல் 5% வட்டி தருகிறோம் என்று சொல்வதைக் கேட்டு மீண்டும் மீண்டும் ஏமாந்து கொண்டிருக்கிறோம்.
இதில் பாதுகாப்பு என்பதே இல்லை எனவே பாதுகாப்பு விளிம்பைப் பற்றிப் பேசுவதற்கு இடமில்லை. இன்று பெரிய பெரிய உற்பத்தி செய்கின்ற தொழில் நிறுவனங்களே 15 முதல் 20% க்கு மேல் பணம் ஈட்ட முடியாதபோது எவ்வாறு சிலரோ அல்லது சிறு நிறுவனமோ 48% முதல் 60% வரை உங்களுக்குக் கொடுக்கும். மேலும் அவர்கள் வங்கியிலோ அல்லது வேறு சில இடங்களிலோ வட்டிக்கு வாங்கினால் கூட 48% கொடுக்கத் தேவையில்லை. அப்படி இருக்கும் போது நமக்கு 48% வட்டி கொடுத்து எத்தனை சதவிகிதம் அவர்களால் சம்பாதிக்க முடியும்?
நம்முடைய பணத்தைப் பாதுகாப்பதற்கு நாம் முயற்சி செய்யா விட்டால் வேறு யார் செய்வார்கள்? முதலில் நம்முடைய பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்வது என்பது நம்முடைய பொறுப்பு. மற்றவர் சொல்கிறார்கள் என்று எதிலும் முதலீடு செய்ய வேண்டாம், நமக்கு என்ன தேவை என்று நம்மைத் தவிர பிறருக்கு அவ்வளவாகத் தெரியாது.
எனவே கொஞ்சம் பிளான் செய்து, பாதுகாப்பு விளிம்பையும் யோசித்து முதலீடு செய்வது நல்லது.
சாராம்சம்:
முதலீட்டின் முதல் படியாக பாதுகாப்பு விளிம்பை நாம் அறிந்து செயல்பட்டால் ரிஸ்க் என்பது அறவே இல்லை என்று கூட சொல்லலாம். எந்த ஒரு முதலீட்டையும் அது உச்சத்தில் இருக்கும்போது அதாவது பல மடங்கு கடந்த காலங்களில் உயர்ந்து காணப்பட்டால் அதைத் தவிர்ப்பது நல்லது. அரசாங்க கட்டுப்பாட்டிற்குள் செயல்படாத முதலீடு மிகவும் ரிஸ்க் வாய்ந்தவை. முதலீட்டை பற்றி அறிந்து கொள்ளுங்கள், நிறைய பணம் செய்யலாம் வாருங்கள்.
padmanaban@fortuneplanners.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT