Published : 10 Jan 2022 03:10 PM
Last Updated : 10 Jan 2022 03:10 PM

ஃபாக்ஸ்கான் இந்தியா ஐபோன் தொழிற்சாலை: தமிழகத்தில் வரும் 12-ம் தேதி மீண்டும் உற்பத்தி தொடக்கம்

ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை

சென்னை: ஆப்பிள் நிறுவனத்துக்குத் தேவையான ஐபோன் மொபைல் போன்களை உற்பத்தி செய்து வழங்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையில் வரும் 12-ம் தேதி முதல் 500 தொழிலாளர்களுடன் உற்பத்தியைத் தொடங்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

17 ஆயிரம் ஊழியர்களுடன் ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் ஐபோன் மொபைல் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி அங்கு பணியாற்றிய ஊழியர்களில் 250 பேர் தாங்கள் சாப்பிட்ட உணவால் உடல்நலக் குறைவுக்கு ஆளாகினர். இதையடுத்து, ஊழியர்கள் நடத்திய போராட்டத்தால் நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டது.

ஆப்பிள் நிறுவனம் இந்தத் தொழிற்சாலையைத் தொடங்கியதிலிருந்து தொழிலாளர்கள் தங்குமிடம், உணவு சாப்பிடும் இடத்தை அரசின் தரத்துக்கு இணையாக வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் அதுகுறித்து அந்நிறுவனம் சார்பில் எந்த பதிலும் இல்லை.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கூறுகையில், “கடந்த வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், வரும் 12-ம் தேதி முதல் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை 500 தொழிலாளர்களுடன் இயங்கும் எனத் தெரிவித்தார். 10 ஆயிரம் தொழிலாளர்கள் தங்கும் வகையில் தரமான விடுதி வசதியைத் தமிழக அரசு , பிற நிறுவனங்களின் பங்களிப்புடன் உருவாக்கித் தரவேண்டும். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்க அரசு அனுமதிக்காது என்பதில் உறுதியாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

ஃபாக்ஸ்கான் நிறுவனம் முழுமையாக உற்பத்தியைத் தொடங்க தீவிரமாக இருக்கிறது. ஆனால், படிப்படியாகவே உற்பத்தியை அதிகரிக்கும். எப்போது முழு வீச்சில் உற்பத்தி நடக்கும் என்பதைத் தெரிவிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஐபோன் 12 மற்றும் 13 டெஸ்டி யூனிட் ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் இயங்கி வருகிறது. இந்தியாவில் வேறு எங்கும் இதுபோன்று தொழிற்சாலை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x