Published : 18 Jun 2014 11:00 AM
Last Updated : 18 Jun 2014 11:00 AM
ஒழுங்கு முறை ஆணையங்கள் சரியாகச் செயல்பட சுதந்திரம் மற்றும் நெகிழ்வுத்தன்மை வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம்ராஜன் தெரிவித்திருக்கிறார். மும்பையில் நடந்த ஸ்டேட் வங்கியின் பொருளாதார கருத்தரங்கில் ராஜன் இதை தெரிவித்தார்.
ஒழுங்கு முறை ஆணையங்கள் கொண்டுவரப்படும் சட்டங்கள் சட்ட ரீதியாக மேல் முறையீட்டுக்கு உட்படுத்தப்படும் என்று நிதித்துறை சட்டரீதியான சீர்த்திருத்த குழு (எஃப்.எஸ்.எல்.ஆர்.சி.) பரிந்துரை செய்தது. இதற்கு நிதித்துறை மேல் முறையீட்டு தீர்பாயத்தை உருவாக்கலாம் என்றும் பரிந்துரை செய்திருந்தது. 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த பரிந்துரை வெளியானது.
கமிட்டியின் இந்த பரிந்துரை குறித்து ராஜன் அதிருப்தி தெரிவித்தார். ஏற்கெனவே ஒழுங்குமுறை ஆணையங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் மீது உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யும் வாய்ப்பு இருக்கும் போது இது போன்ற ஒரு தீர்ப்பாயம் தேவையில்லை என்றார்.
தற்போதைய நிலையில் ஒழுங்கு முறை ஆணையங்கள் தங்களுடைய எல்லையை மீறி செயல்பட்டாலோ, தவறான செயல்களில் ஈடுபட்டாலோ அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் இருக்கின்றன என்றும் அவர் கூறினார்.
புதிதாக அமைக்கப்படும் தீர்ப் பாயம் அபராதம் குறித்தோ அல்லது சில நிர்வாக விஷயங்களில் கேள்வி கேட்பது குறித்தோ எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. ஆனால் அதைத்தாண்டி கொள்கை முடிவுகளில் தலையீட்டு தீர்ப்பு கூறுவது சரியாக இருக்காது என்றும் தெரிவித்தார்.
இந்த தீர்ப்பாயம் அமைக்கப்பட்டால், ஒழுங்குமுறை ஆணையங்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்காது என்றார். ஒழுங்குமுறை ஆணையங் களுக்கு சுதந்திரம் வேண்டும். தற்போதைய நிலைமையில் இருந்து அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்றால் ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றார்.
ரகுராம் ராஜனுக்கு முந்தைய கவர்னர் சுப்பாராவும் இது போன்ற ஒரு தீர்ப்பாயத்தை கடுமையாக எதிர்த்தார். ஆனால் இதற்கு முன்பு இருந்த அரசாங்கம் எப்.எஸ்.எல்.ஆர்.சி. கமிட்டியின் பரிந்துரைகளை செயல்படுத்தவே விரும்பியது.
இந்த கமிட்டி அனைத்து ஒழுங்கு முறை ஆணையங்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அரசு தன்னுடைய கடன்களை சொந்தமாக நிர்வாகம் செய்ய விரும்பினால் ரிசர்வ் வங்கி தலையிடாது என்றும் தெரிவித்தார்.
தவிர ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. உணவு நிர்வாகம் பணவீக்கத்தை குறைக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார்.
இராக் பிரச்சினை குறித்து பேசிய அவர், இந்தியாவிடம் போதுமான அளவுக்கு கையிருப்பு இருக்கிறது, நடப்பு கணக்கு பற்றாக்குறையும் குறைவாக இருக்கிறது. இதுபோன்ற சவால் களை எளிதில் சமாளிக்க முடியும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT