Published : 03 Jan 2022 07:01 PM
Last Updated : 03 Jan 2022 07:01 PM
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட 'டெஸ்லா' மின்சார வாகன நிறுவனத்தின் முக்கியப் பிரிவுக்குத் தலைமை அதிகாரியாகத் தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மின்சார வாகன உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக எலான் மஸ்கின் டெஸ்லா இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தற்போது ஓட்டுநர் இல்லாமல் தானாகவே இயங்கும் தானியங்கி மின்சார கார் உற்பத்தியில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. டெஸ்லாவின் இந்த உற்பத்திக் குழுவின் முதல் ஊழியராக ஒரு தமிழரை எலான் மஸ்க் நியமித்துள்ளார். அவர் பெயர் அசோக் எல்லுசுவாமி.
தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்க், ''டெஸ்லாவின் மின்சார வாகன 'ஆட்டோ பைலட்' குழுவின் முதல் ஊழியராக அசோக் எல்லுசுவாமி பணியமர்த்தப்பட்டுள்ளார். இதன் பொருள் டெஸ்லாவின் 'ஆட்டோ பைலட்' குழு செயல்படத் தொடங்கிவிட்டது" என்று பதிவிட்டுள்ளார். மேலும், 'ஆட்டோ பைலட்' குழுவின் பொறியியல் பிரிவை அசோக் வழிநடத்திச் செல்வார் என்றும் மஸ்க் தகவல் தெரிவித்துள்ளார்.
யார் இந்த அசோக் எல்லுசுவாமி?
சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் இளங்கலைப் பட்டம் படித்த அசோக் ஒரு ரோபோடிக்ஸ் இன்ஜினீயர். சென்னையில் மின்னணு பொறியியல் படித்த பிறகு, அமெரிக்காவின் கார்னெகி மெல்லான் பல்கலைக்கழகத்தில் ரோபோடிக்ஸ் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார். கடந்த எட்டு வருடங்களாக டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றி வரும் அசோக் எல்லுசுவாமி, 2014-ம் ஆண்டுதான் டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார்.
தொடக்கத்தில் டெஸ்லாவின் 'ஆட்டோ பைலட்' திட்டத்தின் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றத் தொடங்கியவர், தற்போது டெஸ்லாவின் 'ஆட்டோ பைலட்' குழுவின் இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். மின்சார கார் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கும் டெஸ்லாவின் எதிர்கால திட்டமான 'ஆட்டோ பைலட்' குழுவில் இயக்குநராகத் தமிழர் பணியமர்த்தப்பட்டுள்ள செயல் வாழ்த்துகளைக் குவித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT