Published : 03 Jan 2022 11:54 AM
Last Updated : 03 Jan 2022 11:54 AM

இந்தியாவில் வேலையின்மை 4 மாதங்களில் இல்லாத அளவு அதிகரிப்பு: பொருளதார வல்லுநர்கள் கவலை

படம் உதவி: ட்விட்டர்

புதுடெல்லி : இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதத்தின் வேலையின்மை சதவீதம், முந்தைய 4 மாதங்களில் இல்லாத அளவாக 7.9 சதவீதம் அதிகரி்த்துள்ளது என இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) தெரிவித்துள்ளது.

நகர்புறங்களில் வேலையின்மை கடந்த டிசம்பர் மாதத்தில் 9.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது நவம்பரில் 8.21 சதவீதமாகவே இருந்தது. கிராமப்புற வேலையின்மை கடந்த நவம்பரில் 6.44 சதவீதமாக இருந்த நிலையில், டிசம்பரில் 7.28 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த நவம்பரில் இந்தியாவில் ஒட்டுமொத்த வேலையின்மை 7 சதவீதமாக இருந்தநிலையில், டிசம்பரில் 7.9 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது என்று இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் 2-வது அலை நாட்டில் உச்சத்தில் இருந்தபோது கடந்த ஆண்டு மே மாதத்தில் வேலையின்மை 11.84 சதவீதமாக இருந்தது. பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலும் அந்தநேரத்தில் தடைபட்டிருந்ததால், வேலையின்மை அதிகரித்து காணப்பட்டது. ஆனால், அதன்பின் பொருளாதாரம் இயல்புநிலைக்கு திரும்பி வந்து, வேலையின்மை சதவீதம் குறைந்துவந்தது.

இந்நிலையில், ஒமைக்ரான் பரவல் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, பொருளாதார நடவடிக்கைகள் முடங்குவதையடுத்து, மீண்டும் வேலையின்மை சதவீதம் அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேரக் கட்டுப்பாடுகள், கடைகள் திறப்பதில் நேரக் கட்டுப்பாடு, போக்குவரத்தில் கட்டுப்பாடு போன்றவை கொண்டுவரப்பட்டுள்ளதால், பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கத் தொடங்கியுள்ளதாக, பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மாநிலங்களில் அதிகபட்சமாக ஹரியாணாவில் வேலையின்மை 34.1 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 27.1 சதவீதமாகவும், ஜார்க்கண்டில் 17.3 சதவீதமாகவும் இருக்கிறது.

மும்பையைச் சேர்ந்த இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் தொடர்ந்து வேலையின்மை சதவீதம், பொருளாதார நிலை ஆகியவற்றை உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஆனால், மத்திய அரசு சார்பில் இதுவரை டிசம்பர் மாத வேலையின்மை அளவை வெளியிடவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x