Published : 29 Dec 2021 02:56 PM
Last Updated : 29 Dec 2021 02:56 PM

வருமான வரி கணக்கு சரிபார்க்க பிப்ரவரி 28-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

மும்பை: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாள் ஆகும். 2020-21 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி சரிபார்ப்பு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

வருமான வரி தாக்கல் செய்ய ஆண்டு தோறும் ஜூலை 31 ஆம் தேதி தான் கடைசி நாளாக இருக்கும். ஆனால் புதிய வருமான வரித் தளத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவும், கரோனா தொற்றுப் பாதிப்பு காரணமாகவும் செப்டம்பர் 30 மற்றும் டிசம்பர் 31 என இரண்டு முறை வருமான வரி தாக்கல் செய்யக் கடைசி நாள் நீட்டிக்கப்பட்டது.

வருமான வரி டிசம்பர் 31 நெருங்கி வரும் நிலையில், நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதுகுறித்து வருமான வரித்துறை தெரிவித்துள்ளதாவது:

டிசம்பர் 27, 2021 நிலவரப்படி, வருமான வரித் துறையின் புதிய இ-ஃபைலிங் இணையளத்தில் 4.67 கோடி வருமான வரி ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

டிசம்பர் 27, 2021 அன்று மட்டும் 15.49 லட்சத்திற்கும் அதிகமான ஐடிஆர்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கணக்கு தாக்கல் செய்ய டிசம்பர் 31-ம் தேதி இறுதி நாள் என்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நிதியாண்டு 2021-22 க்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்ட 4.67 கோடி ஐடிஆர்களில் 53.6% ITR1 (2.5 கோடி), 8.9% ITR2 (41.7 லட்சம்), 10.75% ITR3 (50.25 லட்சம்), 25% ITR4 (1.17 கோடி), ITR5 (5.18 லட்சம்), ITR6 (2.15 லட்சம்) மற்றும் ITR7 (43 ஆயிரம்) ஆகும்.

இந்த ஐடிஆர்களில் 48.19% க்கும் அதிகமானவை ஆன்லைன் ஐடிஆர் படிவத்தைப் பயன்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ளவை ஆஃப்லைன் மென்பொருள் பயன்பாடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட ஐடிஆரைப் பயன்படுத்தி பதிவேற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே 2019-20 நிதியாண்டு, 2020-21 மதிப்பீட்டு ஆண்டுக்கான ஐடிஆர்களை சரிபார்க்காத வரி செலுத்துவோர், பிப்ரவரி 28, 2022க்குள் சரிபார்ப்பு செயல்முறையை முடிக்கலாம், வருமான வரிச் சட்டம் பிரிவு 119 (2) (a)-இன் கீழ் இந்த அறிவிப்பை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் கையொப்பம் இல்லாமல் மின்னணு முறையில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்கு (ITR), ஆதார் OTP அல்லது நெட்-பேங்கிங் அல்லது டிமேட் கணக்கு, முன் சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்கு மற்றும் ATM மூலம் அனுப்பப்பட்ட குறியீடு மூலம் 120 நாட்களுக்குள் மின்னணு முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

காகித வடிவத்தில் கையொப்பமிட்டு பெங்களூரு அலுவலகத்துக்கு தபால் மூலம் அனுப்பியவர்களுக்கும், ஆன்லைன் மூலமாக எலெக்ட்ரானிக் முறையில் தாக்கல் செய்தவர்களுக்கும் இது பொருந்தும். இதனை கட்டாயமாக 2022 பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

இந்த கால அவகாச நீட்டிப்பு என்பது 2020-21 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் சரிபார்ப்புக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x