Published : 12 Mar 2016 10:19 AM
Last Updated : 12 Mar 2016 10:19 AM
எப்போதுவேண்டுமானாலும் தொலைந்து விடலாம் என்று உணரும் போதுதான், அதன் மீது அதிக அன்பு உருவாகும் என்றார் ஆங்கில எழுத்தாளர் ‘கில்பர்ட் செஸ்டர்டன்’. அதிகமாக இருக்கும் எதன் மதிப்பும் நமக்குத் தெரிவதில்லை. இன்னும் சொல்லப்போனால் ஈசியாய் கிடைக்கும் அல்லது கிடைக்காமல் இருப்பதில்தான் எந்த ஒன்றின் மதிப்பும் அமைகிறது. இதை உளவியலாளர்கள் `பற்றாக்குறை கோட்பாடு’ (The Scarcity Principle) என்றழைக்கிறார்கள்.
கும்பகோணத்திற்கு கடைசியாய் எப்பொழுது சென்றீர்கள்? ‘ஆசைதான், ஆனால் எங்கே முடிகிறது, நேரம் கிடைப்பதில்லை’ என்கிறீர்கள். ஆனால் மாமாங்கம் வந்தால் காணாததைக் கண்டது போல் வீட்டிலிருந்தே கன்னத்தில் போட்டபடி ஓடுகிறீர்கள். ஏனெனில் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வரும் மாமாங்கம் என்பது காணாததைக் காண்பது போலத்தானே. அந்த பற்றாக்குறை தரும் பரபரப்புதான் அங்கு வரும் கூட்டத்திற்குக் காரணம். அலைமோதும் மக்கள் வெள்ளத்திற்கு அடிப்படை. கும்பமேளாவில் கூட்டம் குமிவதும் இந்த பற்றாக்குறை கோட்பாட்டால்தான்.
அதற்காக பன்னிரண்டு வருடத்திற்கு ஒரு முறை வந்தால்தான் பற்றாக்குறை என்பதல்ல. அதிகம் கிடைக்காத, அடிக்கடி அமையாத, நிறைய இல்லாத எதன் மீதும் நமக்கு ஒரு ஈர்ப்பு வரும். எல்லாமுமே பற்றாக்குறை கோட்பாட்டின் கைங்கர்யம்தான். வருடத்திற்கு ஒரு முறை வருவதால் தானே ஆடித் தள்ளுபடியை நம் மனம் நாடி, ஊரே தி.நகரைத் தேடி, அங்கு சென்று கூடி அந்த ஏரியாவே மாமாங்கம் தோற்கும் அளவிற்கு காட்சி அளிக்கிறது!
போகும் கோயில், வாங்கும் பொருள் என்பது மட்டுமல்ல. பற்றாக்குறை கோட்பாடு வாழ்க்கையின் பல விஷயங்களைப் பாதிக்கும் தன்மை கொண்டது. கார் கம்பெனிகள் தங்கள் கார் இமேஜை கூட்டி, விற்பனையை அதிகப்படுத்தும் எண்ணத்தோடு ’ஒரு லட்சம் கார்கள் விற்பனையானது’, ‘நாங்கள் இந்தியாவிற்கு வந்து ஓராண்டு பூர்த்தியாகிறது’ என்று ஏதோ ஒரு காரணம் கூறி தங்கள் புது மாடலில் சில மாற்றங்கள் செய்து அந்த விசேஷ கார்களை குறைந்த எண்ணிக்கையில் தயாரித்து ‘லிமிடெட் எடிஷன்’ என்று விற்பதைப் பார்த்திருப்பீர்கள். இவ்வகை கார்கள் மார்க்கெட்டில் அதிகம் கிடைக்காது. அதனாலேயே அறிவித்த சில நாட்களிலேயே புக்கிங் செய்யப்பட்டு அனைத்தும் விற்பனையாகிவிடும்.
விலை குறைந்த கார்களா இவை? இல்லை, இன்னும் சொல்லப் போனால் அதே பிராண்ட் கார்களை விட விலை கூட இருக்கும். இக்கார்களில் புதுமை அதிகம் இருக்குமோ? அப்படியொன்றும் பெரிய புண்ணாக்கு புதுமை பீரிட்டு அடிக்காது. அதே நான்கு டயர், ஸ்டியரிங் வீல், ப்ரேக், க்ளச் தான். பின் என்னதான் ஸ்பெஷல் இந்த கார்களில்?
இந்த ஸ்பெஷல் குறைந்த எண்ணிக்கை லிமிடெட் எடிஷன் கார்களை விட்டால் கிடைக்காது. சென்றால் வராது. போனால் போனதுதான் என்று விளம்பரங்கள் கூறுவதால் இதையாவது விடுவதாவது என்று கார் இருப்பவர்கள் இல்லா தவர்கள், பணம் வைத்திருப்பவர்கள் இல்லாதவர்கள் என்று பலர் முண்டி யடித்து இந்த கார்களை வாங்க க்யூ கட்டுவதால் விரைவிலேயே விற்றுவிடுகிறது.
குறைவாய் இருப்பது நிறைவாய் இருக்கும் என்று நினைப்பது மனித இயல்பு. அதிகம் கிடைக்காத எதுவும் சிறந்தது என்று எண்ணுவது நமது வழக்கம். கிடைக்கிற வாய்ப்பு எப்பொழுதாவதுதான் அமையும் என்ற நிலை இருந்தால் அந்த வாய்ப்பு விலை மதிப்பற்றதாக தெரியும் நமக்கு.
விளம்பர உத்தி
டீவியில் விளம்பரப்படுத்தி நேரடியாக விற்கும் ஹோம் ஷாப்பிங் நிறுவனங்கள் இந்த கோட்பாட்டை கடைப்பிடித்து கல்லா கட்டும் கில்லாடித்தனத்தை நீங்கள் கண் கூடாக கண்டிருக்கலாம்.
ஏதோ ஒரு பொருளை பற்றி அரை மணி நேரம் பேசி, அதன் செயல்முறையை ஆதி முதல் அந்தம் வரை விளக்கி, அதன் விலையை கூறி விளம்பரத்தின் முடிவில் இந்த அதிசயப் பொருள் இப்பொழுது குறுகிய விலையில் கிடைக்கிறது என்று விலையை குறைத்து கூறுவார்கள். இந்த குறைந்த விலை இன்னும் சற்று நேரத்திற்கு மட்டுமே. உடனே போன் செய்யுங்கள். இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள், இந்த ஆபர் போனால் வராது என்று அலறுவார்கள்.
இதைப் பார்ப்பவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை நிறுத்தி, கையில் இருப்பதை கடாசி, ஏதோ வீடு தீப்பற்றி எரிவது போல் பரபரப்புடன், அய்யோ நான் என்ன செய்வேன், இந்த ஆபர் போயிடக்கூடாதே, தெய்வமே கருணை காட்ட மாட்டியா என்று போனை எடுத்து ஆர்டர் செய்ததும்தான் போன உயிர் திரும்ப வரும். பற்றாக்குறை கோட்பாட்டின் கோரப் பிடியின் இன்னொரு பரிமாணம் இது.
இதில் வேடிக்கை என்னவென்றால் அடுத்த நாளும் அதே நேரம், அதே சேனல், அதே விளம்பரம், அதே போல் வரும். அந்த விளம்பரத்தின் முடிவிலும் அதே குரல் ‘இந்த அரிய விலை குறைப்பு இன்னும் கொஞ்சம் நேரத்திற்கு மட்டுமே’ என்று அதே போல் அலறும். அன்று அதை பார்க்கும் இன்னொரு கூட்டம் செய்யும் வேலையை விட்டு கை கால் கொள்ளாமல், கலவர பீதியில் காவடி எடுத்து, குட்டிக்கரணம் போட்டு போனைத் தேடிப் பிடித்து ஆர்டர் செய்த பின்தான் அவர்கள் பக்தி மலையேறும். பற்றாக்குறை கோட்பாடு இங்கும் பற்றாக்குறை இல்லாமல் தன் கைவரிசை காட்டும்!
பற்றாக்குறை கோட்பாடு நம் தினப்படி வாழ்க்கையிலும் வக்கனையாய் விளையாடும். கரண்ட் பில், கிரெடிட் கார்ட் பில், பால் கார்ட் என்று கட்டியே ஆக வேண்டிய, வாங்கியே தீரவேண்டிய எதையும் கடைசி நாள் தான் நம்மில் பலர் கட்டுவோம். கடைசி நாளை விட்டால் விட்டதுதான், அதற்கு பிறகு வாய்ப்பு இல்லை என்னும் போது தான் கட்டவேண்டும் என்ற பயம் வந்து, பரபரப்பாய் மாறி, பைத்தியம் பிடித்து ஓடிச் சென்று கட்டுவோம்.
இந்த சைக்காலஜி டெக்னிக்கை தேர்ந்த விற்பனையாளர்கள் நேர்த்தியாக பயன்படுத்தி பயன்பெறலாம். பெறுகிறார்கள். புடவை கடையில் ஒரு குறிப்பிட்ட நகையை, புடவையை வாங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளரிடம் ‘இது தாம்மா கடைசி பீஸ்’ என்று சொல்லிவிட்டால் போதும். திடீரென்று அந்த பொருளின் மதிப்பு பார்ப்பவருக்கு பல மடங்கு பெருகும். இதை விட்டால் கிடைக்காதே என்ற திடீர் பயம்தான், வேறென்ன. அந்த பயம் அவர்களை வாங்கவே வைத்துவிடும்.
வீட்டு புரோக்கர்கள் வீட்டை பார்த்து விட்டு வாங்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்ய முடியாதவரிடம் ‘இந்த வீட்டை நேத்து ஒரு டாக்டருக்கு காட்டினேன், ரொம்ப பிடிச்சு போச்சு அவருக்கு. இன்னிக்கு போன் பண்றேன்னு சொல்லியிருக்கார்’ என்று கூறினால் போதும். சாதாரண வீடு திடீரென்று ஸ்பெஷல் சாதாவாக மாறி பார்ப்பவர் வாங்கிவிடுவோம் என்று முடிவே செய்து விடுவார்.
பற்றாக்குறை கோட்பாடு
சென்ற வாரம் ஈரோட்டில் ஒரு துணிக்கடையில் ‘இந்த பிரத்யேக, குறைந்த கால சலுகை இன்று மட்டும்’ என்று எழுதியிருந்ததைப் பார்த்தேன். ’பிரத்யேக’ என்றாலே பற்றாக்குறை. அதிலும் ’குறைந்த கால சலுகை’ என்று கொசுறு வேறு. பத்தாதற்கு `இன்று மட்டும்’ என்று முத்தாய்பாய் ஒரு முடிவு. இந்த போர்டு எழுதியதற்கு பதில் பேசாமல் அந்த கடைக்காரார் வாடிக்கையாளர் கழுத்தைப் பிடித்து தரதரவென்று இழுத்து கடைக்குள் தள்ளி ‘ம்ம்ம் வாங்குடா’ என்று அதட்டியிருக்கலாம்.
சும்மா சொல்லக்கூடாது, பற்றாக்குறை கோட்பாட்டை அட்சரம் குறையாமல் அறிந்து வைத்திருக்கிறார் மனிதர்!
satheeshkrishnamurthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT