Published : 20 Dec 2021 11:15 AM
Last Updated : 20 Dec 2021 11:15 AM
மும்பை: ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கரோனா வைரஸ் ஒமைக்ரான் பீதி எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவடைந்தன.
உலகம் முழுவதும் கரோனா தாக்கத்தால் பொருளாதாரம் பற்றிய கவலை நிலவி வருகிறது. பல்வேறு நாடுகளும் தொழில்துறைக்கு ஊக்கம் தரும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தைகளும் கடந்த 10 மாதங்களாக கடும் ஏற்றத்தில் இருந்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்தது.
இந்தநிலையில் தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. மேலும் ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கை நீட்டித்தும் வருகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கமான சூழல் நிலவுகிறது.
இதன் எதிரொலியாக கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. இந்த சரிவு இன்றும் தொடர்ந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,158புள்ளிகள் சரிவடைந்தன.
காலை 9:45 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1,108 புள்ளிகள் குறைந்து 55,903 ஆகவும், நிஃப்டி 50 குறியீடு 339 புள்ளிகள் அல்லது 2 சதவீதம் சரிந்து 16,646 ஆகவும் இருந்தது.
ஆசிய பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியடைந்தன. கச்சா எண்ணெய் விலையும் சரிந்தது. ஒமைக்ரான்
பீதி காரணமாக ஐரோப்பாவில் இறுக்கமான சூழல் உள்ளதாகவும், இதனால் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கவுள்ள சூழலில் உலகப் பொருளாதாரம் மீண்டும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT