Last Updated : 09 Mar, 2016 10:27 AM

 

Published : 09 Mar 2016 10:27 AM
Last Updated : 09 Mar 2016 10:27 AM

தொலைக்காட்சி துறையில் நுழையும் முகேஷ் அம்பானி: சகோதரருக்கு போட்டியாக உருவாகிறதா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தொலைக் காட்சி துறையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இது அவரது சகோதரர் அனில் அம்பானிக்கும் போட்டியாக உருவாகும் என்று கருத்து பரவியுள்ளது. தகவல் மற்றும் தொலைதொடர்பு துறையில் ஒரு பகுதியாக உள்ள இந்த தொலைக்காட்சி துறையில் முதலீடு செய்வதன் மூலம் அவரது சகோதரருக்கு எதிராக மன கசப்பு உருவாகியுள்ளது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எரிவாயு துறையில் மிக லாபகரமாக இயங்கி வரும் முக்கிய தனியார் துறை நிறுவனமாக உள்ளது. நுகர்வோர் துறையிலும் இந்த நிறுவனம் சமீப காலமாக கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தொலைத்தொடர்பு துறையில் 4ஜி தொலைத் தொடர்பு சேவையை வழங்கும் ஆர்ஜியோ நிறுவனத்தை இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. இதற்காக நிறுவனம் 1,800 கோடி டாலர் முதலீடு செய்தது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,20,000 கோடி ஆகும். தற்போது அதன் தொடர்ச்சியாக மேலும் 200 கோடி டாலரை தொலைக்காட்சி துறையில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இந்திய ரூபாயில் 13,000 கோடி முதலீடு செய்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து நிறுவனம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

முகேஷ் அம்பானி இதன் மூலம் கேபிள் அல்லது சாட்டிலைட் டிவி துறையில் பெரிய நிறுவனத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். ஏற்கெனவே இவரது சகோதரர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் இந்த துறையில் முக்கிய நிறுவனமாக இருந்து வரும் நிலையில் இதற்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜியோ உருவாக்கப்பட்டுள்ளது என்று கருத்து உருவாகியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை வீட்டு பொழுதுபோக்கு என்கிற வகையில் தொலைக்காட்சி துறை மிகப் பெரிய சந்தை கொண்டது. குறைந்த லாபம் என்றாலும் மிகப்பெரிய சந்தையாக உள்ளது. மிகச்சிறிய அளவில் உள்ளூர் அளவில் பலரும் ஈடுபட்டுள்ள துறை இது. தற்போது அம்பானி தொடங்க உள்ள தொலைக்காட்சி நிறுவனம் தீவிரமாக இவர்கள் ஒவ்வொருவரோடும் ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளது. இதன் மூலம் கேபிள் டிவி இணைப்பில் எந்த தடையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்று இது குறித்து தகவல அறிந்தவர்கள் கூறுகின்றனர். தொலைக்காட்சி செயல்பாடுகளை தொடங்குவதற்கான வேலைகளில் ஒரு பகுதியாக ஹாத்வே கேபிள், டென் நெட்வொர்க்ஸ் மற்றும் சிட்டி கேபிள் நிறுவனங்களுடன் கூட்டு வைக்க உள்ளது என்றும் தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து பெயர் குறிப் பிடாமல் தகவல் தெரிவித்த ரிலையன்ஸ் அதிகாரிகள், மூன் றாண்டுகளில் 2 கோடி வாடிக்கை யாளர்களை கொண்டு வருவது என்று இலக்கு வைத்துள்ளோம். முதற்கட்டமாக 10 லட்சம் வாடிக்கை யாளர்கள் என்றும், அடுத்த ஆண்டில் 50 லட்சம் வாடிக்கை யாளகள் என்றும் நிறுவனம் இலக்கு வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். தற்போது இந்தியாவில் 2 கோடி மக்கள் அகண்ட அலைவரிசை அல்லது இதர இண்டர்நெட் இணைப்புகளை வைத்துள்ளனர். 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தற்போதுவரை 1,70,000 நபர்கள்தான் ஆப்டிக்கல் பைபர் (கண்ணாடியிழைக் கேபிள்) வழி ஒயர் இல்லாத இண்டர்நெட் இணைப்பு வைத்துள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனம் தங்களது இலக்கை அடைந்துவிட்டால், இந்த துறையில் அசைக்க முடியாத நிறுவனமாக இருக்கும் என்று முன்னணி கேபிள் நிறுவனமான டென் சாட்டிலைட் நெட்வொர்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜிவ் கவி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கூறிய ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள், இண்டர்நெட் இணைப்புடன் உயர்தர தொழில்நுட்பத்தில் நூறுக்கும் மேற்பட்ட சேனல்கள் மற்றும் வீடியோ ஆன் டிமாண்ட் சேவையும் கிடைக்கும். டிவி சீரியல்கள், படங்கள் போன்றவற்றை உயர்தரத்தில் கொடுக்க முடியும் என்று குறிப்பிட்டனர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x