Published : 03 Jun 2014 09:00 AM
Last Updated : 03 Jun 2014 09:00 AM
மே மாத கார் விற்பனையில் மாருதி சுஸுகி விற்பனை 19 சதவீதம் உயர்ந்தது. அதேசமயம் கொரியாவின் ஹூன்டாய் கார் விற்பனை 9 சதவீதம் சரிந்துள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம் மே மாதத்தில் மொத்தம் 1,00,925 கார்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் மொத்தம் 84,677 கார்களை விற்பனை செய்திருந்தது. உள்நாட்டில் இந்நிறுவனத்தின் கார் விற்பனை 16.4 சதவீதம் அதிகரித்து 90,560 ஆக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 77,821 கார்களை விற்பனை செய்திருந்தது.
மாருதி சுஸுகி நிறுவனம் 10,365 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஏற்றுமதியானதைக் காட்டிலும் 51 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் மொத்தம் 6,856 கார்களே ஏற்றுமதியாகியிருந்தன.
ஹூண்டாய் விற்பனை சரிவு
கொரியாவின் துணை நிறுவனமான ஹூண்டாய் நிறுவனத்தின் கார் விற்பனை மே மாதத்தில் 9 சதவீதம் சரிந்து 51,718 ஆக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 56,856 கார்களை விற்பனை செய்திருந்தது.
இந்நிறுவனத்தின் உள்நாட்டு கார் விற்பனை 12 சதவீதம் அதிகரித்து 36,205 ஆக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவன கார் விற்பனை 32,102 ஆகும். நிறுவனத்தின் ஏற்றுமதி 37 சதவீதம் சரிந்தது. மொத்தம் 15,513 கார்களை இந்நிறுவனம் ஏற்றுமதி செய்திருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் 24,754 கார்களை இந்நிறுவனம் ஏற்றுமதி செய்திருந்தது.
மஹிந்திரா விற்பனை 13% சரிவு
மஹிந்திரா நிறுவன கார்களின் விற்பனை 13 சதவீதம் சரிந்து 37,869 ஆக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவன தயாரிப்புகளின் விற்பனை 43,460 ஆக இருந்தது. நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 35,499 ஆகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் விற்பனை 42,104 ஆக இருந்தது.
ஸ்கார்பியோ, எக்ஸ்யுவி 500, ஸைலோ, பொலேரோ, வெரிடோ ஆகியவற்றின் விற்பனை 18,085 ஆகும். முந்தைய ஆண்டு இது 22,244 ஆக இருந்தது. இந்நிறுவன வர்த்தக வாகன விற்பனை 13 சதவீதம் சரிந்து 12,836 ஆக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 14,848 ஆக இருந்தது.
ஏற்றுமதி 74 சதவீதம் அதிகரித்து 2,370 ஆக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஏற்றுமதியான கார்களின் எண்ணிக்கை 1,356 ஆகும்.
ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனை 43% சரிவு
ஜெனரல் மோட்டார்ஸ் கார்களின் விற்பனை மே மாதத்தில் 43 சதவீதம் சரிந்து 4,865 ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 8,500 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. மே மாதத்தில் பீட் 1,716, 1,076 டவேரா, 934 செவர்லே கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டோமொபைல் துறை பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. பொருளாதார மந்த நிலை காரணமாக நுகர்வோரின் வாங்கும் திறன் குறைந்து விற்பனையும் சரிந்துள்ளதாக நிறுவனத்தின் துணைத் தலைவர் பி. பாலேந்திரன் கூறினார். புதிய அரசு பொறுப்பேற்றுள்ளதால், எதிர்காலத்தில் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்.
ஹோண்டா கார் விற்பனை 18% உயர்வு
ஹோண்டா கார்களின் மே மாத விற்பனை 18 சதவீதம் அதிகரித்து 13,362 ஆக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் 11,342 கார்களை விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனம் 1,333 பிரையோ, 4,752 அமேஸ், 7,218 செடான் சிட்டி கார்களை மே மாதத்தில் இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது தவிர 59 எஸ்யுவி கார்களை விற்பனை செய்துள்ளது. மேலும் 518 கார்களை இந்நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.
ஃபோர்டு விற்பனை 2 மடங்கு உயர்வு
ஃபோர்டு கார்களின் விற்பனை மே மாதத்தில் இரு மடங்கு அதிகரித்து 12,288 ஆக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் 5,993 கார்களை விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனம் உள்நாட்டில் 6,053 கார்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இது 4,002 ஆக இருந்தது. நிறுவனம் மொத்தம் 6,235 கார்களை ஏற்றுமதி செய்திருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் ஏற்றுமதி செய்த கார்களின் எண்ணிக்கை 1,991 ஆகும்.
டிவிஎஸ் விற்பனை உயர்வு
இருசக்கர வாகன விற்பனையில் ஈடுபட்டுள்ள டிவிஎஸ் நிறுவனத்தின் மே மாத விற்பனை 27 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 2,10,293 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 1,65,151 வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இரு சக்கர வாகன விற்பனை 1,59,346 ஆக 2013 மே மாதத்தில் இருந்த விற்பனை 2014 மே மாதத்தில் 2,01,234 ஆக உயர்ந்துள்ளது. ஆட்டோக்கள் விற்பனை 2013 மே மாதத்தில் 5,805 ஆக இருந்தது. அது இப்போது 9,059 ஆக உயர்ந்துள்ளது.
ஹோண்டா விற்பனை 55% அதிகரிப்பு
ஹோண்டா நிறுவனத் தயாரிப்புகளின் விற்பனை 55 சதவீதம் அதிகரித்து 3,55,726 ஆக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 2,29,143 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.
மோட்டார் சைக்கிள் விற்பனை 76 சதவீதம் அதிகரித்து 1,60,295 ஆக உயர்ந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் விற்பனை 91,280 ஆக இருந்தது. ஸ்கூட்டர் விற்பனை 42 சதவீதம் அதிகரித்து 1,95,431 ஆக உயர்ந்தது. முந்தைய ஆண்டு இது 1,37,863 ஆக இருந்தது.
யமஹா விற்பனை 40% உயர்வு
யமஹா மோட்டார் சைக்கிள் விற்பனை 40.14 சதவீதம் உயர்ந்து 47,680-ஐ தொட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 34,021 ஆக இருந்தது. இந்நிறுவனம் 19,440 மோட்டார் சைக்கிள்களை ஏற்றுமதி செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில்இது 15,356 ஆக இருந்தது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட யமஹா ஆல்பா ஸ்கூட்டர், நிறுவன விற்பனை உயர்வுக்கு முக்கிய பங்காற்றியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT