Published : 01 Mar 2016 08:58 AM
Last Updated : 01 Mar 2016 08:58 AM

ஜேட்லி எழுதிய பரீட்சையில் நாடு பாஸாகுமா?

நாட்டு நிதி அமைச்சருக்கும் நாட்டிலுள்ள கணவன்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. என்ன செய்தாலும், எத்தனை கவனமாக செயல்பட்டாலும் இருவர் செயலிலும் குறை கண்டுபிடித்து கடித்து குதறுபவர் உண்டு.

பட்ஜெட் வந்திருக்கிறது. நாட்டின் பல துறைகளை தொட் டிருக்கிறார் நிதி அமைச்சர். ‘நாய் வாய் வைப்பது போல் எல்லா வற்றையும் தொட்டிருக்கிறார்’ என்று கூறுவார்கள் சிலர். நிதி அமைச்சராய் லட்சணமாய் நாட்டின் அனைத்து தரப்பையும் அரவணைத்திருக்கிறார் என்பார்கள் மற்றவர்கள்.

வியாபாரிகள் முதல் விவசாயிகள் வரை, பீடி பிடிப்பவர் முதல் பிபிஎல் குடும்பங்கள் வரை, புதிய தொழில் துவங்குவோர் முதல் பழைய தொழிலில் வரி செலுத்தாதவர் வரை பலரை ஒரு பிடி பிடித்திருக்கிறார். வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு வரிச் சலுகை அளித்திருக்கிறார். இதுவரை வரி ஏய்ப்பு செய்தவர்களுக்கு பாவ மன்னிப்பு திட்டம் ஒன்றை அளித்திருக்கிறார். இது வரும் என்று தெரிந்திருந்தால் நானும் இத்தனை நாள் வரி கட்டாமல் இருந்திருப்பேன்.

சேவை வரியை கூட்டியிருக்கிறார். ஹோட்டல் சாப்பாட்டின் அளவு குறைந்து பில் மட்டும் கூடப்போகிறது. இனி டெலிஃபோன் பேச அதிகம் தரவேண்டும். சரி, நேரில் சென்று பேசலாம் என்றால் பெட்ரோல், டீசல் வரியை கூட்டியிருக்கிறார். கார் மீதான வரி கூடியிருக்கிறது. இந்த ஜென்மத்தில் என்னை போன்றவர்கள் கார் வாங்கப் போவதில்லை.

அது என்னவோ, எல்லா நிதி அமைச்சர்களுக்கும் சிகரெட் பிடிப்பவர்களை கண்டால் ஆகாது. வருடா வருடம் சிகரெட் மீது வரி ஏற்றுவார்கள். அய்யோ சிகரெட் விலை ஏறுகிறதே என்ற வயிறெரிந்து புகையும் மனசை அதிக செலவோடு புகை விட்டு ஆற்றுவார்கள் சிகரெட் பிரியர்கள். இந்த ஆண்டும் அப்படியே. ஆனால் பீடி மீது மட்டும் வரி ஏறுவதே இல்லை. எல்லா நிதி அமைச்சர்களும் பீடி பிடிப்பார்களோ என்னவோ.

கிராமங்களுக்கு அதிகம் ஒதுக்கியிருக்கிறார். நாடு வளர `ரூரல் த்ரஸ்ட்' வேண்டும் என்று கூறி வருகிறார்கள் பொருளாதார நிபுணர்கள். செய்திருக்கிறார். அந்நிய முதலீட்டை இங்கு வரவேற் றிருக்கிறார். வரவேற்கத்தக்க முயற்சி. இதனால் குறைந்தபட்சம் கருவேப்பிலை, கொத்தமல்லி கட்டின் விலையாவது குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

தேவையில்லாத பொருள் களை வாங்கினால் தேவையான பொருட்களை நீங்கள் விற்க வேண்டியிருக்கும் என்றார் வாரன் பபெட். இதை உணர்ந்திருக்கிறார் நிதி அமைச்சர். பட்ஜெட் பற்றாக்குறை ஏறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். பட்ஜெட்டின் துண்டு அதிகமானால் அரசாங்கம் ஏகத்திற்கும் கடன் வாங்க வேண்டியிருக்கும். இந்த வருடம் அரசாங்கம் வாங்காத கடனை தனியார் துறை வாங்கும். பழைய தொழில் தழைக்க, புதிய தொழில் பிறக்க வழி பிறக்கும். இதனால் ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைக்கலாம்.

இன்று பரிட்சை எழுதப் போவது போல் உணர்கிறேன் என்றார் பிரதமர் நரேந்திர மோடி. அவருக்காக ஜேட்லி பரிட்சை எழுதியிருக்கிறார்.

நாடு பாஸாகும் என்று நம்புவோம்!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x