Published : 08 Oct 2021 02:29 PM
Last Updated : 08 Oct 2021 02:29 PM
நாட்டில் டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் உடனடி பேமெண்ட் சேவையான ஐஎம்பிஎஸ் பரிமாற்றத்தின் அளவு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.
2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. நிதிக் கொள்கை குறித்து முடிவு எடுக்கும் 6 பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழு நடப்பு நிதியாண்டு தொடங்கியபின் 3-வது முறையாக மும்பையில் கூடி விவாதித்தது.
2020-ம் ஆண்டு மே 22-ம் தேதி வட்டி வீதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைக்கப்பட்டது. அதன்பின் கடந்த ஓராண்டாக வட்டி வீதம் குறைக்கப்படவில்லை.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நிதிக்கொள்கைக் குழு தொடர்ந்து 8-வது முறையாக வட்டி வீதத்தில் மாற்றமில்லாமல் இன்று அறிவித்துள்ளது. இதனால் கடனுக்கான வட்டிவீதம் தொடர்ந்து 4 சதவீதமாகவே நீடிக்கிறது. வங்கிகளுக்கான இறுதிநிலை கடன்வசதி வட்டி வீதம் 4.5 சதவீதமாகவும், ரிசர்வ் ரெப்போ ரேட் 3.35 சதவீதமாகவும் நீடிக்கிறது.
இந்தக் கூட்டத்துக்குப் பின் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:
பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யவில்லை. நிதிக்குழு உறுப்பினர்களில் 6 பேரில் 5 பேர் வட்டிவீத மாற்றத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2021- 2022 நிதியாண்டில் 9.5% ஆக இருக்கும். 2-வது காலாண்டில் 7.9 சதவீதமாகவும், 3-வது காலாண்டில் 6.8 சதவீதாகவும், 4-வது காலாண்டில் 6.1 சதவீதாகவும் இருக்கும். 2022-23ம் நிதி ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 17.2 சதவீதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நுகர்வோர் பணவீக்கம் 5.1சதவீதமாக இருந்தது.
நாட்டில் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் ஐஎம்பிஎஸ் பரிமாற்றத்தின் அளவை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது. இப்போது ஐஎம்பிஎஸ் மூலம் நாள்தோறும் அதிகபட்சமாக ரூ.2லட்சம் வரைமட்டுமே பரிமாற்றம் செய்ய முடியும், இனிமேல் ரூ. 5 லட்சம்வரை பரிமாற்றம் செய்யலாம்.
இதன்மூலம் இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் செயலி, வங்கி கிளைகள், ஏடிஎம், எஸ்எம்எஸ்,ஐபிஆர்எஸ் ஆகியவை மூலம் பரிமாற்றம் அதிகரிக்கும். தற்போது ஆர்டிஜிஎஸ், நெப்ட் மற்றும் ஐஎம்பிஎஸ் சேவை 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது.
ஆன்-லைன் மூலம் மட்டுமே டிஜிட்டல் பரிமாற்றம் செய்யப்பட்டு வரும்நிலையில் இனிமேல், ஆஃப் லைன் மூலமும் பரிமாற்றம் செய்யும் முறையை விரைவில் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்ய உள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு பரிசோதனை முயற்சிகள் நடந்தன. இதில் இன்டர்நெட் இணைப்பின் சக்தி குறைவாக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் டிஜிட்டல் பரிமாற்றம் செய்யமுடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த 2020 செப்டம்பர் முதல் 2021 ஜூன் வரையில் ஆஃப் லைனில் டிஜிட்டல் பரிமாற்றம் செய்து பரிசோதிக்கப்பட்டது. இதில் வெற்றிகரமாக 2.41 லட்சம் பரிமாற்றத்தில் ரூ.1.16 கோடி மதிப்புக்கு டிஜிட்டல்பரிமாற்றம் செய்யப்பட்டது.
பரிசோதனை முயற்சியில் வெற்றிகரமான முடிவுகள் கிைடத்ததால், விரைவி்ல் ஆஃப் லைன் பரிமாற்றத்துக்கான விதிகள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.
இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT