Published : 09 Sep 2021 05:38 PM
Last Updated : 09 Sep 2021 05:38 PM
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார் நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது இரண்டு உற்பத்தி ஆலைகளையும் மூடவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஃபோர்டு இந்தியா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் உற்பத்தி செயல்பாடுகளை ஃபோர்டு மாற்றியமைக்கிறது. அதன்படி சென்னை, சனந்தில் உள்ள ஆலைகள் இனி கார் உற்பத்தி செய்யாது. 2021- 4வது நிதியாண்டு காலாண்டுடன் முடிவடையும் காலத்துடன் ஏற்றுமதிக்கான வாகன உற்பத்தியை சனந்த் ஆலை நிறுத்திக் கொள்ளும். அதேபோல் சென்னையில் உள்ள இன்ஜின் தயாரிப்பு மற்றும் வாகனங்களை அஸெம்பிள் செய்யும் ஆலை 2022ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டுடன் பணியை நிறுத்திக் கொள்ளும்.
அதுவரை, ஃபோர்டு நிறுவனம் தனது தயாரிப்புகளை இறக்குமதி மூலம் இந்தியாவில் விற்பனை செய்வதோடு இப்போது இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து டீலர்கள் சேவைகளை வழங்க உதவும்.
இவ்வாறு அந்த ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்தியாவில் இருந்து ஜெனரல் மோட்டார்ஸ், ஹார்லி டேவிட்சன் போன்ற நிறுவனங்கள் இந்திய ஆட்டோமொபைல் சந்தையை விட்டு வெளியேறிவிட்டன. இந்நிலையில், ஃபோர்டு நிறுவனமும் வெளியேறும் தகவல் இத்துறைக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ஃபோர்டு நிறுவனத்திற்கு இந்தியாவில் இரண்டு உற்பத்தி ஆலைகள் உள்ளன. ஒன்று சென்னையில் உள்ளது. இன்னொன்று குஜராத் மாநிலம் சனந்த் எனும் பகுதியில் இருக்கிறது. சென்னையில் உள்ள தொழிற்சாலையில் 2 லட்சம் கார்களை உற்பத்தி செய்யலாம். 3.50 லட்சம் இன்ஜின்களைத் தயாரிக்கலாம். குஜராத் ஆலையில், 2.4 லட்சம் கார்களை உற்பத்தி செய்யலாம். 2.7 லட்சம் இன்ஜின்களைத் தயாரிக்கலாம். இந்த ஆண்டு தொடங்கி கடந்த ஜூன் மாதம் வரை ஃபோர்டு நிறுவனம் வெறும் 2800 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT