Published : 06 Jun 2014 12:00 AM
Last Updated : 06 Jun 2014 12:00 AM

ஆண்கள் வீடு செவ்வாய்: பெண்கள் வீடு சுக்கிரன்!

இன்று பெண்கள் பலர் அரசியல் கட்சித் தலைவிகளாக இருக்கிறார்கள்: தொண்டர், வட்டம், மாவட்டம் என்னும் பல படிநிலைகளில் பணியாற்றுகிறார்கள். நிர்வாகத்தில் முதல் அமைச்சர்கள், ஆளுநர்கள், அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் தொழில் முனைவோர், சி.இ.ஓக்கள், இயக்குநர்கள், மேலாளர்கள், நிர்வாக ஆலோசகர்கள், டாக்டர்கள், வக்கீல்கள், பொறியியல் வல்லுநர்கள் என்று ஜொலிக்கிறார்கள். இவர்களில் பலர் பேச்சு வார்த்தைகளில் பங்கெடுக்கிறார்கள். .

இதனால், பேச்சு வார்த்தைகள் பற்றிய பயிற்சிகளில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் இரண்டு:

பெண்களோடு பேச்சு வார்த்தைகள் நடத்தும்போது, நாம் நம் அணுகு முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டுமா?

பெண்கள், ஆண்கள் சாதாரணமாகக் கடைப்பிடிக்கும் வழிகளைப் பின்பற்றலாமா, அல்லது தனி வழியில் பயணிக்க வேண்டுமா?

உங்கள் பதில் என்ன? “இல்லை” என்று சொல்கிறீர்களா? பேச்சு வார்த்தை என்பது தமக்குள் இருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இருவரோ, அதற்கு அதிகமானவர்களோ எடுக்கும் முயற்சி. இதில், ஆண் பெண் என்கிற வித்தியாசம் கிடையாது என்று நீங்கள் சொல்லலாம்.

நண்பர்களே, உங்கள் தீர்ப்பு தவறானது. நான் மட்டும் இதைச் சொல்லவில்லை. நூற்றுக்கணக்கான மனோதத்துவ மேதைகள், நிர்வாகவியல் நிபுணர்கள், மனிதவளத் துறை அறிஞர்கள் சொல்கிறார்கள்.

பேச்சு வார்த்தைகள் வெற்றிபெற வேண்டுமானால், இரண்டு தரப்பினருக்குள்ளும் பரஸ்பர நம்பிக்கை வரவேண்டும். அவர்கள் கண்ணோட்டத்தில் நாம் பிரச்சினையைப் பார்க்கவேண்டும். இதற்கு, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவேண்டும். அவர்களுடைய குணநலன்கள், எதிர்பார்ப்புகள், அவர்களைப் பாதிக்கும் விஷயங்கள் ஆகியவை பற்றி நமக்குத் தெரியவேண்டும்.

ஆண்களும், பெண்களும் மனோ தத்துவ ரீதியாக ஒரே மாதிரியா னவர்கள் அல்ல, அவர்களுக்குள் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த உண்மை நம்மில் பலருக்குத் தெரியாது. நாம் ஆண்களாக இருந்தால், சின்ன விஷயங்களைக்கூட இவர்களால் ஏன் புரிந்துகொள்ளவில்லை என்று எரிச்சல் படுவோம்: பெண்களும், இந்த ஆண்கள் ஏன் முரட்டுப் பிடிவாதம் பிடிக்கிறார்கள் என்று சலிப்பார்கள். எரிச்சலும் சலிப்பும் உரசலுக்குக் கொண்டுபோகும். கண்டுகொள்ளாமல் விட்டால், உரசல் விரிசலாகும்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் அப்படி என்ன அடிப்படையான மனோதத்துவ வித்தியாசங்கள்?

எண்ணங்களில், மனத் தேவைகளில், உறவு எதிர்பார்ப்புகளில், பிரச்சி னைகளை அணுகும் விதத்தில், கருத்துக் களை வெளிப்படுத்தும் முறையில், பழகும் பாணியில், ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே நாம் எதிர்பார்க்கவே முடியாத வித்தியாசங்கள் இருப்பதாக அறிஞர்கள் சொல்கிறார்கள்.

இவர்களுள் முக்கியமானவர் ஜான் க்ரே (John Gray). பழகும் முறை பற்றிய ஆலோசனைகளும், பயிற்சிகளும் தரும் ஜான் க்ரே, இது தொடர்பாக 20 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவை 50 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. 5 கோடிப் பிரதிகளுக்கும் அதிகமாக விற்பனை யாகியிருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது, Men are from Mars, Women are from Venus. 25,000 ஆண், பெண்களின் குணாதிசயங்களை ஆராய்ந்து க்ரே இந்தப் புத்தகத்தைப் படைத்திருக்கிறார். இரண்டு வேறுபட்ட கிரகவாசிகள்போல், அவர்கள் குணங்கள் வித்தியாசமானவை என்பது புத்தகத் தலைப்பின் அர்த்தம்.

க்ரே என்ன சொல்கிறார்?

ஆண்கள் விரும்புபவை, மதிப்பவை – அதிகாரம், பதவி, திறமை, வெற்றிகள். பெண்களோ இவற்றுக்கும் அதிகமாக, அன்பு, உறவுகள், தாங்கள் பிறரால் மதிக்கப்படும் விதம் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்.

பெண்கள் சின்னச் சின்ன விஷயங்களில் சந்தோஷம் பெறுகிறார்கள். ராம், அவர் மனைவி மாலதி. ராம் ஒரு நாள் மல்லிகைப் பூ வாங்கிவருகிறார். மாலதிக்கு மகிழ்ச்சி. இன்னொரு நாள். ராமுக்கு போனஸ் வருகிறது,. மனைவிக்கு சர்ப்ரைஸ் தர நினைக்கிறார். நகைக் கடைக்கு அழைத்துப்போகிறார், நெக்லஸ் வாங்கிக் கொடுக்கிறார். இப்போதும் மாலதி முகத்தில் வழக்கமான காதல் கலந்த சிரிப்புதான்.

மாலதி சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்பார் என்று எதிர்பார்த்த ராமுக்கு ஏமாற்றம். அவருக்குத் தெரியாது, பெண்களின் மனோபாவங்கள் ஆண்களிடமிருந்து வித்தியாசமானவை – அவர்களுக்கு மல்லிகைப் பூவும், வைர நெக்லஸும் ஒன்றுதான். பரிசுகளின் விலை மதிப்பைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. இரண்டுமே, அவர்களுக்கு அன்பின் அடையாளங்கள். இரண்டுமே ஒரே மகிழ்ச்சி தருகின்றன. ஆணோ, பரிசின் விலைக்கு ஏற்ற சந்தோஷத்தை எதிர்பார்க்கிறான்.

அலுவலகத்திலும் இப்படித்தான். ஆண்கள், பெண்கள் இருவரும் உயர் அதிகாரிகள் தரும் பாராட்டுதல்களை, அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறார்கள், ஆண்களுக்கு இவை வருடம் ஒரு முறை சம்பள, பதவி உயர்வுகளாக இருந்தால் போதும்: பெண்கள் இவற்றுக்கும் மேலாகத் தேடுவது உயர் அதிகாரிகள் தரும் பாராட்டு வார்த்தைகளை. இந்த அங்கீகாரம் அடிக்கடி கிடைத்தால், தங்கள் வேலைகளில் அதிக அர்ப்பணிப்போடு ஈடுபடுகிறார்கள்.

ஸ்ட்ரெஸ் என்னும் மன அழுத்தம் வரும்போது, ஆண் பெண் ஆகிய இருவரின் நடைமுறைகளையும் கவனித்துப் பாருங்கள். வித்தியாசம் வெளிப்படையாகத் தெரியும். ஆண்கள் பெரிய பிரச்சினைகள் குறித்து மட்டுமே மனைவியோடு பேசு கிறார்கள். பெண்களுக்கோ, சின்ன விஷயத்தைக் கூடக் கணவரிடம் பகிர்ந்துகொள்ளாவிட்டால் தலை வெடித்துவிடும்.

மனைவியிடம் பிரச்சினை பற்றிப் பேசும்போது கணவன், அவள் தீர்வு சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறான். மனைவி, கணவன் தான் சொல்வதைக் கேட்கவேண்டும் என்று மட்டுமே எதிர்பார்க்கிறாள். அவன் தன் பேச்சைக் கவனமாகக் கேட்காமல் டி.வி பார்க்கிறான், பேப்பர் படிக்கிறான் என்று நினைத்தால் மனம் உடைந்துபோகிறாள். அவன் கவனமாகக் கேட்கவேண்டும் என்பதுதான் அவள் ஆசை.

அவன் தீர்வுகள் சொன்னால், அவள் ஆழ்மனம் அதை எதிர்க்கிறது. மன அழுத்த நேரங்களில் ஆண்கள் எதிர்பார்ப்பது தீர்வுகளை, பெண்கள் அதைவிட அதிகமாக எதிர்பார்ப்பது, தன் குறைகளை யாராவது கவனமாகக் கேட்பதை.

உங்களோடு பேச்சு வார்த்தைகள் நடத்தும் எதிர் அணியில் பெண்கள் இருந்தால், நீங்கள் என்ன செய்யவேண்டும்?

பெண்களுக்கு மதிப்பு கொடுங்கள். அவர்களைச் சமமாக நடத்துங்கள். அவர்கள் உடல் வலிமையிலோ, மன உறுதியாலோ ஆண்களுக்குத் தாழ்வானவர்கள் என்னும் எண்ணம் அவர்கள் மனங்களில் தோன்றாமல் கவனித்துக்கொள்ளுங்கள். நாசூக்காக, நேர்மையாகப் புகழுங்கள். அவர்கள் பேசுவதைக் கவனமாகக் கேளுங்கள். கேள்விகள் கேளுங்கள். இந்தக் கேள்விகள் அவர்களைச் சோதிப்பவையாக இருக்கக்கூடாது: அவர்கள் கருத்துக் களை விளக்கும் வாய்ப்புகளாக இருக்க வேண்டும்.

பேச்சு வார்த்தைகள் நடத்தும் பெண்கள் என்ன செய்யவேண்டும்?

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது, “பெண்களிடம் இரண்டு ஆயுதங்கள் உண்டு. ஒன்று மேக்கப், இன்னொன்று கண்ணீர். அதிர்ஷ்டவசமாக, இவை இரண்டையும் அவர்கள் ஒரே சமயத்தில் பயன்படுத்தமுடியாது.” இந்த அடிப்படையில் பெரும்பாலான ஆண்கள், பெண்கள்பற்றி வைத்திருக்கும் அனுமானங்கள் என்ன தெரியுமா?

பெண்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். தங்கள் அழகையும், அழுகையையும் காட்டி ஜெயிக்கப் பார்ப்பார்கள் என்பதாகும்! பெண்களே, இது நிஜமல்ல என்று உங்கள் அணுகுமுறையால் நிரூபியுங்கள். அறிவு பூர்வமாக விவாதியுங்கள். செவ்வாயும் சுக்கிரனும் சந்திக்கட்டும், கை குலுக்கட்டும், பிரச்சினைகள் தீரட்டும்.

slvmoorthy.gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x