Published : 31 Aug 2021 03:19 PM
Last Updated : 31 Aug 2021 03:19 PM
பிரமாண்ட் கப்பலில் ஏற்றி வரப்பட்ட 93,719 டன் சுண்ணாம்பை கையாண்டு தூத்தக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மினா சாகர் துறைமுகத்திலிருந்து வந்த ‘எம் வி இன்ஸ் அன்காரா’ என்ற சிங்கப்பூர் கப்பல், செட்டிநாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்காக 93,719 டன் சுண்ணாம்பை ஏற்றி வந்தது.
ஆகஸ்ட் 26 ஆம் தேதி துறைமுகத்தை அடைந்த கப்பலிலிருந்து மூன்று நடமாடும் சுமை தூக்கிகளின் மூலம் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் டன் சரக்குகள் இறக்கப்பட்டன. அனைத்து சரக்குகளும்ஆகஸ்ட் 29-ம் தேதி அன்று கப்பலிலிருந்து இறக்கப்பட்டன.
இதற்கு முன்பாக கடந்த மே மாதம் 92,935 டன் நிலக்கரியை ஏற்றி வந்த எம் வி பாஷன்ஸ் கப்பலை கையாண்டதே மிக அதிக அளவிலான சரக்காக இருந்தது.
2021-22 நிதி ஆண்டில் வ. உ. சிதம்பரனார் துறைமுகம் கையாண்டு வரும் சரக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 10.58 மில்லியன் டன் சரக்குகள் இந்தத் துறைமுகத்தால் கையாளப்பட்ட நிலையில், இந்த வருடம் ஜூலை மாதம் வரை 11.33 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு 7.14 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
இந்தத் துறைமுகத்தின் வாயிலாகக் கையாளப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ஜூலை மாதம் வரை 2.69 லட்சம் கொள்கலன்களை இந்தத் துறைமுகம் கையாண்டு முந்தைய நிதி ஆண்டை விட 21.07 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT