Published : 19 Jun 2014 12:00 AM
Last Updated : 19 Jun 2014 12:00 AM
இப்போது இந்தியாவில் `வரி தீவிரவாதம்’ நடந்து கொண்டிருக்கிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் எப்படியெல்லாம் வரி விதிக்க முடியுமோ அப்படி வரி விதித்து வருகிறார்கள். இவ்வளவு வரி விதிப்பு முறைகள் இருந்தும் அரசுக்கு வருமானம் வந்ததா என்று கேட்டால் அதுவும் இல்லை. இந்த வரி விதிப்பு முறைகளால் கருப்புப் பணமும் ஊழலும்தான் அதிகரித்திருக்கிறது. இதனால் முதலீட்டு சூழ்நிலை பாதிக்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி. அவசியம்
வரி சம்பந்தமாக பல விஷயங்களை நிதி அமைச்சர் செய்ய வேண்டும். அதில் முதலாவது சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) எவ்வளவு சீக்கிரம் கொண்டுவரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொண்டுவர வேண்டும். இதில் சில சில இடங்களில் பிரச்சினைகள் இருந்தாலும் ஜி.எஸ்.டி அவசியம். இதேபோன்ற பிரச்சினை, எதிர்ப்புதான் 2004-ம் ஆண்டு மதிப்பு கூட்டு வரி (வாட்) கொண்டு வரும்போதும் இருந்தது. ஆனால் இப்போது நிலைமை சரியாகிவிட்டது.
இதேபோலதான் ஜி.எஸ்.டி. கொண்டுவரும் போது சில மாநிலங்களுக்கு வருமானம் பாதிக்கப்படலாம். அந்த மாநிலங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் இழப்பீட்டைக் கொடுக்கலாம். அது 2015 ஏப்ரல் 1-ம் தேதி நடைமுறைக்கு வருமாறு இருக்க வேண்டும்.
வருமானவரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட வேண்டும்
120 கோடிக்கும் மேலான மக்கள் தொகை இருக்கும் நாட்டில் சுமார் நான்கு கோடி மக்கள் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள். இத்தனை வருடங்களில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க முடியவில்லை.
தற்போது இருக்கும் சிக்கலான வரி அமைப்பில் இந்த எண்ணிக்கையை அதிகரிப்பது கடினம். அதனால் எவ்வளவு சீக்கிரம் இதை நீக்க முடியும் என்பதை பற்றி யோசிக்க வேண்டும். அதனால் இந்த உச்ச வரம்பை ரூ. 2 லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் வருமான வரி மூலம் திரட்டப்படும் தொகை அதிகமாக இருக்க வேண்டும் என்று அரசு நினைக்கிறது.
ஆனால் புதிய நபர்கள் மூலம் இதை வசூல் செய்ய வேண்டும் என்று நினைக்காமல், ஏற்கெனவே சரியாக வரி கட்டும் நபர்களிடமிருந்தே இதை எதிர்பார்க்கிறது அரசு. ஐந்த லட்சத்துக்கு பிறகு, 10 லட்சம் என இந்த சிஸ்டத்தை முழுமையாக நீக்க வேண்டும்.
அப்படியானால் வருமானத் துக்கு அரசு என்ன செய்யும் என கேள்வி வரலாம். வருமான வரி கட்டவில்லை என்றால் மக்கள் வங்கி சேமிப்பில் இறக்குவார்கள். அதன் மூலம் கடன் கொடுக்க பட்டு வளர்ச்சி இருக்கும். செலவு செய்தால் கூட ஜி.எஸ்.டி மூலமாக அரசுக்கு வருமானம் கிடைத்துக்கொண்டுதான் இருக்கும். மேலும் 80 சி வரம்பில் கொடுக்கப்படும் ஒரு லட்ச ரூபாய் வரம்பையும் 5 லட்ச ரூபாய் வரை அதிகரிக்க வேண்டும்.
இந்த எல்லையை அதிகரிக்கும் போது நீண்டகால சேமிப்பு அதிகரிக்கும்.
கார்ப்பரேட் வரிச்சலுகையை சீராக்க வேண்டும்
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல வகையான சலுகைகள் கொடுக்கப்பட்டுவருகின்றன. இந்த சலுகைகளை சீரமைக்க வேண்டும். கொடுத்தால் அனைத்து நிறுவனங்களுக்கும் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் யாருக்கும் கிடையாது என்று சொல்ல வேண்டும்.
குறிப்பிட்ட மாநிலம், துறை, பொருட்கள், இடம் என்று எந்த விதமான சலுகையும் இல்லாமல் வரி அமைப்பு இருக்க வேண்டும்.
நிறுவனங்கள் வருமானத்தை கணக்கிட்டு, அதில் செலவுகள், தேய்மானம் கழித்து வரி கட்டுவதை விட, நிறுவனங்களின் வருமானத்தில் 1.5% (அ) 2% கட்டிவிட்டால் போதும். எந்த விதமான கணக்கும் தேவை இல்லை என்பது போல கொண்டு வரலாம்.
வருமான வரிச்சட்டத்திலிருந்து வீட்டுக்கடனை நீக்க வேண்டும்
வீட்டுக்கடனையும் (முதல் வீடு) வருமான வரிச்சட்டத்திலிருந்து எடுக்க வேண்டும். அதாவது வீட்டுக்கடனுக்கு கொடுக்கப்படும் சலுகைகளை நீக்க வேண்டும். அதேபோல அந்த முதல் வீட்டில் இருந்து வாடகை வருமானம் கிடைத்தாலும் அதற்கு வரி செலுத்த தேவை இல்லை.
வீட்டுக்கடனுக்கு சலுகை கொடுப்பதனால் தேவையே இல்லாமல் நிறைய நபர்கள் வீடு வாங்குகிறார்கள். இதனால் வீடுகளின் விலை அதிகரிக் கிறது. அனைவருக்கும் வீடு கிடைப்பதல்லை.
ஒரு வேளை ஒரே நபரே இரண்டாவது வீடு வாங்கும்போது, அந்த வீட்டில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் நேரடியாக 40 சதவீதம் வரி விதிக்க வேண்டும்.
வட்டி வருமானத்துக்கு வரி கூடாது
கஷ்டப்பட்டு சம்பாதித்து வரிகட்டி, அந்த பணத்தை சேமிப்பதற்காக வங்கியில் முதலீடு செய்யும்பட்சத்தில் அதில் கிடைக்கும் வட்டிக்கும் வரி விதிப்பது தேவை இல்லாதது. மேலும் வயதானவர்கள் இந்த டெபாசிட்டை நம்பிதான் இருக்கிறார்கள்.
அதனால் மூன்று வருடங்களுக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்யும் பட்சத்தில் அதற்கு வரி விதிக்க கூடாது.
கருப்பு பணத்தை ஒழிக்க..
30 வருடத்துக்கு நீண்ட கால கடன் பத்திரங்களை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இதில் முதலீடு செய்யப்படும் தொகையை கட்டுமான திட்டங் களுக்கு மத்திய அரசு பயன் படுத்திக்கொள்ளலாம். மேலும், இந்த பத்திரத்தில் முதலீடு செய்பவர்கள் கொண்டுவரும் பணத்தை பற்றி எந்த கேள்வியும் கேட்காமல் வாங்கிக்கொள்ளவேண்டும்.(தங்கம் கொண்டுவந்தாலும், அதை வைத்துக்கொண்டு கடன்பத்திரம் வழங்கவேண்டும்)
அதே சமயத்தில் அவர்கள் மீது எந்த விதமான கிரிமினல் வழக்கும் இல்லாமல் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும் இந்த கடன் பத்திரம் குறிப்பிட்ட வருடங்களுக்கு வர்த்தகம் செய்ய முடியாதபடி இருக்க வேண்டும்.
அடுத்து 1,000 ரூபாய் தாளை புழக்கத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். இதன் மூலம் ஊழலை தடுக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT