Published : 06 Jun 2014 11:00 AM
Last Updated : 06 Jun 2014 11:00 AM

பட்ஜெட்டில் விவசாயத்துக்கு முன்னுரிமை: நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதி

எதிர்வரும் பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உறுதி அளித்தார்.

பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகளைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்தார் ஜேட்லி. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உள்ளிட்ட விவசாயத்துறையைச் சேர்ந்த பலர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

வேளாண் துறையில் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும், வேளாண் துறை தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் பாசன வசதி திட்டங்கள் பல பாதியில் நின்று போயுள்ளன, இவற்றை முடிக்க வேளாண் கடன் பத்திரங்களை வெளியிட வேண்டும் என்றும் அரசிடம் நிபுணர்கள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் எதிர்வரும் பட்ஜெட்டில் வேளாண் சந்தை சீர்திருத்தக் கொள்கைகளைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி விவசாய விளை பொருள்களுக்கு அதிகபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். விவசாயத்துறைக்கென தனியாக கிசான் சேனல் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேம்பட்ட கொள்முதல் கொள்கை, வேளாண்துறையை நவீனமய மாக்குவதில் முன்னுரிமை, நதிகளை இணைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டர்.

விவசாய பிரதிநிதிகளின் ஆலோசனைகளைக் கேட்டுக் கொண்ட ஜேட்லி, விவசாயத் துறையில் நிலவும் பிரச்சினைகளை இந்த அரசு பரிவுடன் கவனிக்கும் என்றும் வேளாண் துறைக்கு முன்னுரிமை அளிப்பதே அரசின் பிரதான கொள்கை என்றும் குறிப்பிட்டார். தற்போது நிலவும் நெருக்கடியான பொருளாதார சூழலில் விவசாயத்துக்கு அதிகபட்சமாக செய்யக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு நிச்சயம் செய்யும் என்று உறுதியளித்தார்.

பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் ஒருங்கிணைந்த வேளாண் கொள்கையோடு அதிகபட்ச முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கை இடம்பெற்றிருந்தது. அதற்கு அரசு செயலூக்கம் தரும் என நம்புவதாக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் நம்பிக்கை தெரிவித்தார்.

மண்வளம் காப்பது, நீர்நிலைகளைக் காப்பது மற்றும் உயிர்பன்மம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டதாக அவர் கூறினார். மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஒவ்வொரு வட்டாரத்திலும் மண் பரிசோதனை மையத்தை நவீன கருவிகளுடன் ஏற்படுத்த வேண்டும் என்றும் நமது நாட்டு பாரம்பரிய கால்நடைகளைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சரிடம் கூறியதாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சுவாமிநாதன் கூறினார்.

இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமனும் பங்கேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x