Published : 28 Feb 2016 11:28 AM
Last Updated : 28 Feb 2016 11:28 AM
திரைப்படங்களை பொறுத்தவரையில் தயாரிப்பு, விநியோகம், திரையிடல் ஆகிய மூன்று விஷயங்கள் முக்கியம். இந்த மூன்றிலும் இருக்கிறது ஏஜிஎஸ் குழுமம். இதில் திரையிடல் பிரிவை சேர்ந்த ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தியை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். இந்த துறையில் உள்ள வாய்ப்புகள், சவால்கள் என பல விஷயங்களை நம்மிடம் பேசினார். அந்த உரையாடலில் இருந்து...
பத்மா சேஷாத்ரி பள்ளியில் படித்தவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினீயரிங் (கணிப்பொறி அறிவியல்) மற்றும் அமெரிக்காவில் முதுகலைபடிப்பு முடித்தவர்.
இந்த துறைக்கு எப்படி வந்தீர்கள்?
நான் படித்துக்கொண்டிருக்கும்போது எங்களுடைய தொழில் நிறுவனத்தை (எஸ்.எஸ்.ஐ. எஜுகேஷன்) அதிக விலைக்குக் கேட்டதால் விற்றுவிட்டார்கள். அதன் பிறகு ரியல் எஸ்டேட் துறையில் எங்கள் குடும்பம் கவனம் செலுத்தியது. சினிமா மேல் ஆசை என்பதால் அதில் களம் இறங்கத் திட்டமிட்டோம். அதனைத் தொடர்ந்து சினிமா தயாரிப்பில் அப்பா, சித்தப்பா இறங்கினார்கள்.
அப்போது வில்லிவாக்கத்தில் உள்ள ராயல் தியேட்டரை வாங்கி இருந்தோம். படிப்பு முடிந்து அமெரிக்காவில் இருந்து அப்போதுதான் வந்தேன். வந்த உடன் என்னிடம் இந்த பொறுப்பைக் கொடுத்தார்கள். வீடு கட்டுவது போல தியேட்டர் கட்ட முடியாது. 14 அமைப்புகளிடம் என்.ஓ.சி. வாங்கவேண்டும். தொழில்நுட்ப ரீதியாகவும் சிறப்பாக இருக்க வேண்டும். அதனால் அதனைக் கட்டிமுடிக்க மூன்று வருடம் தேவைப்பட்டது. அதன் பிறகு ஓஎம்ஆர், இப்போது தி.நகரில் தியேட்டர் திறந்திருக்கிறோம்.
நீங்கள் திரைப்படங்கள் பார்ப்பீர்களா?
படம் பார்க்காமல் இருக்க முடியாதே. ஆனால் நான் பிரிவியூ ஷோ போல பிரத்யேக காட்சிகளுக்குச் செல்வதில்லை. பொதுமக்களுடன் சேர்ந்துதான் படம் பார்ப்பேன். அதுவும் ஏஜிஎஸ் தவிர மற்ற தியேட்டர்களில் பெரிதும் பார்ப்பேன். அப்போதுதான் மக்கள் என்ன நினைக் கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு ஒரு படத்தை அதிக திரையில் ஓட வைக்க முடியும். முதல் நாள் முதல் காட்சி பார்த்து விட்டு சில படங்களை 4 ஷோவில் இருந்து 12 ஷோ வரை உயர்த்தி இருக்கிறோம். சில படங்களை குறைத்திருக்கிறோம்.
டிக்கெட் விலையை குறைத்தால், படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை உயருமா?
டிக்கெட் விலையைக் குறைத்தால் தியேட்டர்களை மூட வேண்டியதுதான். எங்களுடைய தியேட்டர்கள் அனைத்தும் சொந்த இடத்தில் இருக்கின்றன. அதனால் கொஞ்சம் தாக்குபிடிக்க முடிகிறது. இல்லையென்றால் கஷ்டம்தான்.
இ-டிக்கெட்டில் 30 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறீர்களே. இதையாவது குறைக்க முடியாதா?
8 வருடமாக டிக்கெட் விலையில் மாற்றம் இல்லை. அதிகபட்ச டிக்கெட் விலை 120 ரூபாய். என்னுடைய பணியாளர்களிடம் டிக்கெட் விலையில் மாற்றம் இல்லை என்பதால் ஒரே சம்பளத்தில் இருக்க சொல்லமுடியாது. மின்சாரம் கட்டணம் உயர்ந்துவிட்டது. டிக்கெட் விற்பனையில் எங்களுக்கு லாபம் இல்லை. பாப்கார்ன், பார்க்கிங் போன்றவற்றின் மூலமாக வருமானம் கிடைக்கிறது. இணையதளத்தை நடத்துவதே பெரிய வேலை. அதற்கு அதிகம் செலவிட வேண்டியிருக்கிறது.
மேலும், டிக்கெட் கட்டணத்தில் 30 சதவீதம் பொழுதுபோக்கு வரியை ஒவ்வொரு வாரமும் செலுத்தியாக வேண்டும். மீதமுள்ள தொகையில் தியேட்டர் உரியமையாளரும் திரைப்பட விநியோகஸ்தரும் பிரித்துக்கொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களில் டிக்கெட் விலை 300 ரூபாய்க்கு மேல் இருக்கிறது.
எத்தனை சதவீத டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன? ஏதாவது அளவுகோல்கள் இருக்கின்றனவா?
60 சதவீத டிக்கெட் விற்பனையாகின்றன. ஒவ்வொரு வாரமும் புதுப்புது படங்கள் வருவதால் வார விடுமுறைகளில் முழுமையாக விற்பனையாகும். வார நாட்களில் 40 சதவீதம் வரை விற்பனையாகும். மார்ச் ஏப்ரலில் தேர்வு காலம் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் வரமாட்டார்கள். அதேபோல ஏப்ரல் பாதிக்கு மேல் மே மாதம் வரை டிக்கெட் விற்பனை நன்றாக இருக்கும். எப்படி இருந்தாலும் படம் நன்றாக இருந்தால்தான் மக்கள் வருவார்கள்.
பல படங்களுக்கு பொழுதுபோக்கு வரியில் இருந்து விலக்கு கொடுக்கப்படுகிறதே?
என்னுடைய புரிதல், இந்த விலக்கு தயாரிப்பாளர்களுக்கு செல்ல வேண்டியது. இல்லையெனில் அவர்கள் அது போன்ற படங்கள் தயாரிக்க வேண்டிய அவசியம் இல்லையே. தவிர தமிழில் வெளியாகும் சில படங்களுக்கு வரி விலக்கு கொடுக்கப் படுகிறது. ஆனால் தெலுங்கு, மலையாளம் ஆங்கில மொழி படங்களுக்கு வரிவிலக்கு கிடையாதே
விரிவாக்கப்பணிகள் எப்படி இருக்கிறது.?
தொடங்கும்போது 100 திரை என்ற எண்ணத்தில்தான் இருந்தோம். ஆனால் சொந்த இடம் இல்லாமல் தியேட்டர் நடத்துவது என்பது மிகவும் கடினம். தற்போதைய டிக்கெட் விலையில் குத்தகைக்கு (லீஸ்) தியேட்டரை எடுத்து நடத்த முடியாது. இப்போது ஆலப்பாக்கத்தில் வேலை நடந்துகொண்டிருக்கிறது.
திரையரங்குகளை 24 மணிநேரம் செயல்பட அனுமதிக்கலாம் என்ற செய்தி வெளியானதே அது குறித்து?
செய்தியாக வந்திருக்கிறது. என்ன நடக்கும் என்று தெரியவில்லை. அப்படி வரும் பட்சத்தில் காட்சிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முடியும்.
- karthikeyan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT