Published : 26 Feb 2016 06:50 PM
Last Updated : 26 Feb 2016 06:50 PM
நாட்டில் மக்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்கு மனித ஆற்றல் மூலதனத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
அதே போல் அனைவரையும் உள்ளடக்கிய கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டின் அவசியத்தையும் 2015-16 பொருளாதார அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பொருளாதார ஆய்வறிக்கை கூறியிருப்பதாவது:
சமூக கட்டமைப்பில் கல்வி, சுகாதார சேவை, வீட்டு வசதி ஆகியவற்றை பெறுவதில் உள்ள இடைவெளியை எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு கல்வி பயன்பாடு, மேம்பட்ட சுகாதார இலக்கு ஆகியவற்றில் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
மக்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்கு மனித ஆற்றல் மூலதன முதலீட்டை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று 2015-16-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. கல்வி, சுகாதாரம், சமூகபாதுகாப்பு, ஊட்டச்சத்து, ஷெட்யூல்ட் வகுப்பினர், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் போன்ற சமூக சேவைகளுக்கான மொத்த செலவினம் 2014-15-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏழு சதவீதமாக உள்ளது என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. 2013-14-ம் ஆண்டு இது 6.5 சதவீதமாகும்.
கல்வித்துறையில் தனியார் மற்றும் பொதுத்துறை பள்ளிகளில் வாசிப்புத் திறன் நிலைமை குறைந்திருப்பது கல்வி பயன்பாட்டில் இறக்கம் காணப்படுவதை பிரதிபலிக்கிறது. 2007 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தை படிப்பதில் 2007-ம் ஆண்டிலிருந்த திறன் 2014-ம் ஆண்டு கடும் வீழ்ச்சியடைந்திருப்பதாக 2014-ம் ஆண்டுக்கான கல்வி நிலைமை பற்றிய ஆண்டறிக்கை கூறுகிறது.
பெண்கள் கல்வியில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அநேகமாக, கல்வியின் எல்லா நிலையிலும் மாணவ-மாணவியருக்கு இடையில் சமநிலை எட்டப்பட்டுள்ளது. ஷெட்யூல்ட் வகுப்பினர், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். சிறுபான்மையினர், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் போன்ற விளிம்பு நிலை மற்றும் வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கு கல்வியளிப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
பெண்கள் கல்வியில் குறைந்த செயல்பாடு உள்ள பகுதிகளை கண்டறிய உதவும் வகையில் பெண்கள் கல்வி பற்றிய வரைபடம் சென்ற ஆண்டு வெளியிடப்பட்டது. பள்ளியில் சேருவதையும், கற்கும் நிலையை மேம்படுத்துவதையும் ஊக்குவிப்பதற்காக பல்வேறு உதவித்தொகை திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. நேரடி பணப்பட்டுவாடா திட்டத்தின் கீழ் பல்வேறு உதவித் தொகை திட்டங்களுக்கென தேசிய உதவித் தொகை இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2015-16-ம் ஆண்டில் சிறுபான்மையின பிரிவைச் சேர்ந்த சுமார் 90 லட்சம் மாணவர்கள் பயனடைய உள்ளனர். மெட்ரிக் வகுப்பிற்கு முந்தைய கல்வி உதவி, மெட்ரிக்குக்கு பிந்தைய கல்வி உதவி, குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த சிறந்த மாணவர்கள் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. மெட்ரிக்குக்கு முந்தைய கல்வி திட்டத்தின் கீழ் 23.21 லட்ச மாணவர்களும், மெட்ரிக்குக்கு மேற்பட்ட கல்வி உதவித் திட்டத்தின் கீழ் 56.3 லட்சம் மாணவர்களும், ராஜீவ்காந்தி தேசிய உதவித் திட்டத்தின் கீழ் 3,354 பேர் பயனடைய உள்ளனர்.
மனித ஆற்றல் மூலதனத்தின் மற்றொரு கூறு உடல்நலத்தை பேணுவதாகும். சமூகச்சேவையில் உடல்நலச் செலவின சதவீதம் 2013-14-ல் 18.6 சதவீதமாக இருந்தது. 2014-15-ல் இது 15.3 சதவீதமாக அதிகரித்தது. 2015-16-ம் ஆண்டில் 19.5 சதவீதமாக இருக்கும்.
1991-ம் ஆண்டில் 126-ஆக இருந்த ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளின் இறப்பு வீதம் 2013-ம் ஆண்டு 49-ஆக குறைந்திருப்பதாக பொருளாதார ஆய்வு தெரிவிக்கிறது. 12 முதல் 23 மாதங்கள் வரையிலான வயது பிரிவில் முழுஅளவில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளின் சதவீதம் சிக்கிமிலும், மேற்குவங்கத்திலும் 80 சதவீதத்திற்கும் கூடுதலாக இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 12 மாநிலங்களிலும் 50 சதவீதத்திற்கும் கூடுதலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்திரதனுஷ் திட்டம் செயல்படுத்தப்படும் 352 மாவட்டங்களில் முதல் கட்டத்தில் 20.8 லட்சம் குழந்தைகளுக்கும், 5.8 லட்சம் கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி அளிக்கப்பட்டது. இரண்டாவது கட்டத்தில் 17.2 லட்சம் குழந்தைகளும், 5.1 லட்சம் கர்ப்பிணி பெண்களும் பயனடைந்துள்ளனர். 3-வது கட்டத்தில் 17 லட்சம் குழந்தைகளுக்கும். 4.8 லட்சம் கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவைதவிர, விரிவான உடல்நலத் திட்டத்தின்கீழ் தேசிய குழந்தைகள் உடல்நலத் திட்டம், 2013-ம் ஆண்டிலும், தேசிய வளர்பருவ உடல்நலத் திட்டம் 2014-ம் ஆண்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டன. தொற்று அல்லாத நோய்கள் அதிகளவில் ஏற்படுவதை கருத்தில் கொண்டு புற்றுநோய், நிரீழிவு. இதயநோய், பக்கவாதம் ஆகிய நோய்களைத் தடுப்பதற்கான ஒருங்கிணைந்த தேசிய திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது. மத்திய சுகாதார குடும்பநல அமைச்சகமும், ஆயுஷ் அமைச்சகமும் இணைந்து சோதனை அடிப்படையில் ஆறு மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அனைத்து குழந்தைகளுக்கும் நோய் தடுப்பூசி வழங்குவது. கர்ப்பிணி பெண்களின் உடல்நலம், பொதுசுகாதார சேவையளிக்கும் அமைப்புகளின் பங்களிப்பு குறைந்து வருவது, போதுமான திறமை பெற்ற பணியாளர்கள் இல்லாதது ஆகியவை சுகாதாரத்துறை தற்போது எதிர்நோக்கும் சவால்களாகும். உடல்நலம், துப்புரவு, வீட்டுவசதி ஆகியவை தொடர்பு கொண்டவையாகும். உற்பத்தித் திறனையும், வாழும் சுற்றுச்சூழலையும் மேம்படுத்துவதற்கு இவை பெருமளவு துணை புரியும். வீட்டு வசதி மற்றும் தூய்மைப்பணி வசதிகளைப் பெறுவதில் பிராந்தியங்களுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளன. பல மாநிலங்களில் 25 சதவீதத்திற்கும் குறைந்த மக்களுக்கு இந்த வசதி கிடைக்கிறது.
பொது மற்றும் தனியார் துறைகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை பொருளாதார ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. கல்வியின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு பயிற்சி பெற்ற நல்ல தகுதியான ஆசிரியர்களின் தேவை உள்ளது. பொது சுகாதார சேவை மற்றும் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கு தனியார் மற்றும் பொதுத் துறைகளில் தனியார் மற்றும் பொதுத்துறை முதலீடுகள் அவசியமாகும். தொழில்நுட்ப அணுகுமுறை ஜன் தன், ஆதார், மொபைல் திட்ட ஒருங்கிணைப்பின் வாயிலாக சேவையளிக்கும் பணியின் திறனை மேம்படுத்த இயலும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT