Published : 26 Dec 2015 10:06 AM
Last Updated : 26 Dec 2015 10:06 AM
‘பரிணாம வளர்ச்சி’ கோட்பாட்டை எழுத ‘சார்லஸ் டார்வினுக்கு’ பல வருடங்கள் தேவைப்பட்டது. டின்னர் முடித்த கையோடு வாயில் வெத்தலை பாக்குடன் விடிய விடிய எழுதிய புத்தகமல்ல அது. உலக ஆராய்ச்சி பலவற்றை பல ஆண்டுகள் படித்து, கரைத்துக் குடித்து, `Galapagos’’ போன்ற உலகின் மூலை முடுக்குகளை தேடி சென்று தான் பார்த்ததை, கவனித்ததைப் பக்கம் பக்கமாய் நோட்ஸ் எடுத்து, எழுதிய அனைத்தையும் அலசி ஆராய்ந்து அதன் அர்த்தங்களைத் தெரிந்து தன் எண்ணங்களை செதுக்கியதன் விளைவே பரிணாம வளர்ச்சி.
அப்புத்தகமே அவர் எண்ணங்களின் பரிணாம வளர்ச்சி என்று கூறலாம். சட்டுன்னு எழுதி முடிங்க என்று கூறியிருந்தால் டார்வினால் இப்படைப்பாற்றலை படைத்திருக்க முடியுமா?
1970ல் சந்திரனுக்கு சென்ற ‘அப்போலோ 13’ ராக்கெட்டில் விபத்து ஏற்பட்டு அதன் ஏர் ஃபில்ட்ரேஷன் சிஸ்டம் பழுதடைந்தது. கேபினில் கார்பன்டையாக்ஸைடு பெருகத் துவங்கியது. விரைவில் சரி செய்யாவிட்டால் மாலுமிகளின் உயிருக்கு ஆபத்தென்ற நிலை. `நாசா’ கட்டுப்பாட்டு அறையில் விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் ஒன்று சேர்ந்தார்கள். புதிய ஃபில்ட்ரேஷன் சிஸ்டம் உருவாக்கி செயல்பட வைக்கும் வழியை ஜுர வேகத்தில் கண்டுபிடித்தார்கள்.
அது அப்பழுக்கில்லா சிஸ்டம் இல்லைதான். ஆனால் ஆபத்துக்கு பாவமில்லாத சிஸ்டம். அதை மாலுமிகளுக்கு விளக்க, அதுபோல் ராக்கெட்டில் ஃபில்ட்ரேஷன் சிஸ்டத்தை அவர்கள் உருவாக்க ஆபத்து தவிர்க்கப்பட்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டன. நேரமில்லாத பதற்ற சூழலில் சாத்தியப்பட்ட படைப்பாற்றல். நிதானமா செய்யுங்கப்பா என்று கூறியிருந்தால் இது சாத்தியப்பட்டிருக்குமா? உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்குமா?
படைப்பாற்றல் (Creativity) என்பது பரபரவென்று பறக்கும் போது பிறக்கும் ஒன்றா, பதற்றச் சூழலில் பிரசவிக்கும் ஒன்றா? படைப்பாற்றலை வளர்க்க ஏதுவான சூழல் எது? அதை வளர்க்க என்ன செய்ய வேண்டும்? பணியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை நிர்வாக உத்தியாக்கினால் பணியாளர்கள் படைப்பாற்றலுடன் பணி புரிய முடியுமா? தங்கள் மீதே அழுத்தம் கொடுத்துக் கொண்டால் நிர்வாகத்தின் படைப்பாற்றல்தான் அதிகரிக்குமா?
இதற்கான விடைகளை ஆறு மாதம் தீர ஆராய்ந்து ‘ஹாவர்ட் பிசினஸ் ரெவ்யூ’வில் ‘Creativity under the gun’ என்று கட்டுரையாக எழுதினார்கள் ’தெரஸா அமபில்’, ‘கான்ஸ்டன்ஸ் ஹேட்லி’, ‘ஸ்டீவன் க்ரேமர்’ ஆகியோர். பணியில் படைப்பாற்றல் தேவைப்படும் ஏழு நிறுவனங்களை தேர்ந்தெடுத்து 200 பணியாளர்களை பார்த்து, பேசி அவர்கள் அனுபவங்களை சேகரித்து எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை.
நேரமில்லாத பதற்ற சூழல் நிறைந்த நாட்களில் படைப்பாற்றல் அதிகமாகவும் சில நாட்கள் வெளிப்படாமலும் இருந்தது. அது போல் நேரம் இருந்து, பதற்ற சூழல் இல்லாத நாட்களில் படைப்பாற்றல் அதிகமாகவும் சில நாட்கள் வெளிப்படாமலும் இருந்தது. பணியில் நிலவிய இந்த நான்கு நிலைகளை பிரித்து ஆராய்ந்தார்கள்.
நேரமில்லா பதற்ற சூழல் / படைப்பாற்றல் அதிகம்
நேரமில்லா பதற்ற சூழலிலும் படைப்பாற்றல் அதிகமிருந்த நாட்களை குறைந்திருந்த நாட்களோடு ஒப்பிடுகையில் சில வித்தியாசங்களை உணர்ந்தார்கள். வேலையில் தெளிவான ஃபோகஸ் இருந்தது. குறுக்கீடுகள், கவனச் சிதறல் இல்லாமல் பணியில் கவனம் செலுத்தும் நிலை நிலவியது. பணியின் அர்த்தமும் அவசியமும் புரிந்து ஒரு இலக்கில் (Mission) ஈடுபட்டிருக்கிறோம் என்று பணியாளர்கள் உணர்ந்திருந்தார்கள். உணர வைக்கப்பட்டிருந்தார்கள். இதனால் பணியில் தங்களை ஐக்கியப்படுத்தி ஒரு பாசிட்டிவ் உத் வேகத்துடன் அவர்களால் பணிபுரிய முடிந்தது. செய்யும் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து மேலா ளர்களும் அவர்கள் பணியில் குறுக்கிடும் வகையில் சிறிய, முக்கிய மில்லாத பணிகளை தரவில்லை. படைப்பாற்றலுடன் அப்போலோ 13 காப்பாற்றப்பட்டது இப்படித் தான்.
நேரமில்லா பதற்ற சூழல் / படைப்பாற்றல் இல்லை
நேரமில்லா பதற்ற சூழலில் பணியில் ஃபோகஸ் இல்லாத நாட்களில் படைப்பாற்றல் இருப்பதில்லை என்பதையும் கண்டார்கள். இதுபோன்ற சூழலில் வேலை செய்வது ட்ரெட்மில் (Treadmill) மீது ஓடுவது போல என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஜிம்மில் மோட்டார் பொறுத்தப்பட்ட மேடை போன்ற மெஷின் மீது நின்ற இடத்திலேயே ஓடுவார்களே, அதுதான் ட்ரெட்மில். ஏன் ஓடுகிறோம், எங்கு ஓடுகிறோம் என்று தெரியாமல் மூச்சிரைக்க ஓடி கடைசியில் கிளம்பிய இடத்திலேயே இருப்பது போல் இச்சூழலில் பணி நடைபெறுகின்றன. இந்த லட்சணத்தில் எங்கிருந்து படைப்பாற்றல் பிறக்கப் போகிறது. இச்சமயங்களில் நிர்வாகம் பணியின் முக்கியத்துவத்தை விளக்கி, அனைவரின் முயற்சியை ஒருமுகப்படுத்தினால் தான் படைப்பாற்றல் பெருகும்.
நேரமின்மை, பதற்ற சூழல் இல்லை / படைப்பாற்றல் அதிகம்
நேரம் இருந்து பதற்ற சூழல் இல்லா நாட்களில் படைப்பாற்றல் பெருகுவது எதனால் என்று ஆய்வாளர்கள் ஆராய்ந்த போது சில உண்மைகள் புரிந்தது. அச்சமயங்களில் பணி பிரச்சனையால் கட்டுண்டு கிடக்காமல் அதை எப்படி சரி செய்து, புதுமைகளை எப்படி படைப்பது என்ற வைராக்கியத்தோடு பணியாளர்கள் பணியாற்றியதை கண்டார்கள். நேரக் கெடு இல்லாத நேரத்தில் அனைவரும் ஒரு சாகச பயணம் (Expedition) செல்வது போல் புதுமையை படைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு பணி புரிந்தால் படைப்பாற்றல் பெருகும் என்கிறார்கள்.
நேரமின்மை, பதற்ற சூழல் இல்லை / படைப்பாற்றல் இல்லை
காலக் கெடுவோ பதற்ற சூழலோ இல்லாத சமயங்களில் படைப்பாற்றல் இல்லாமல் இருந்ததையும் கண்டார்கள். இதுபோன்ற சமயங்களில் ஏதோ வேலைக்கு வந்தோம், என்னவோ செய்தோம் என்று ஏனோதானோ என பணி நடந்தன என்கிறார்கள். இந்நிலையை ’ஆட்டோபைலட்’ (Autopilot) என்கின்றனர். சொகுசு கார்களை குறிப்பிட்ட வேகத்தில் செலுத்தி லாக் செய்தால் ஆக்சிலரேட்டரை மிதிக்காவிட்டாலும் கார் அதே வேகத்தில் தானாக செல்லும். அது போல் இலக்கில்லாமல், ஏதோவென்று பணி செய்தால் படைப்பாற்றல் பிறப்பதில்லை என்கிறார்கள். இச்சமயங்களில் நிர்வாகம் ஆக்சிலரேட்டரை மிதித்து நேரம் உண்டு, உங்களுக்கு திறமை உண்டு என்று உத்வேகமளித்து இலக்கை நிர்ணயித்து தட்டிக் கொடுத்தால் மட்டுமே படைப்பாற்றல் பெருகுகிறது என்கிறார்கள்.
இதனால் அறிவிப்பது என்னவென்றால்…
தீவிர அறிவாற்ற செயலாக்கம் (Complex cognitive processing) நிறைய நேரம் தேவைப்படும் சமாச்சாரம். நேரம் தராமல் பதற்ற சூழலில் பணியாளர் தலையில் துப்பாக்கி வைத்து ‘படைப்பாற்றல் பெருக்கட்டும் என்றால் ஒரு எழவும் பெருகாது. நிர்வாகம் சரியான சூழ்நிலையை உருவாக்கினால் மட்டுமே படைப்பாற்றல் பெருகும்.
ஒரு நாள் ப்ரெஷர் அதிகமாகி வேலை சரியாய் நடக்கவில்லை என்றால் அடுத்த நாள் சரியாகிவிடும் என்றும் நினைக்கக்கூடாது. இரவு தண்ணியடித்தால் மறு நாளும் தலை வலிப்பது போல் அடுத்த நாளும் வேலையில் ’ப்ரெஷர் ஹேங்ஓவர்’ (Pressure Hangover) இருக்கும். படைப்பாற்றல் குறையும். சொல்லியிருக்கிறார்கள்.
எல்லா நிறுவனங்களிலும் குறைவான நேரத்தில் புதுமை புகுத்தி பணி புரிய வேண்டிய சந்தர்ப்பங்கள் இருந்தே தீரும். அப்பேற்பட்ட சமயங்களில் நிர்வாகம் நேரமின்மையின் காரணத் தையும், பணியின் முக்கியத்துவத் தையும் பணியாளர்களிடம் விளக்க வேண்டும். அச்சமயங்களில் பணியாளர் களிடம் வேறு சில்லரை வேலைகள் தந்து படுத்தாமல் இருந்தால் படைப் பாற்றல் பெருகும்.
சுருக்கமாய் சொல்லவேண்டும் என்றால், ஆட்டோ பைலட், ட்ரெட்மில் போன்ற சூழலில் பணி நடந்தால் படைப்பாற்றல் கண்டிப்பாய் இறக்கும். மிஷன், எக்ஸ்பெடிஷன் போன்ற சூழலை உருவாக்கினால் படைப்பாற்றல் பறக்கும்.
நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து ‘ஓடு’ என்று சுடுவதற்கும், ரேஸ் ட்ராக்கில் நிற்க வைத்து ’ஓடு’ என்று சுடுவதற்கும் உள்ள வித்தியாசம் தான் படைப்பாற்றல்!
satheeshkrishnamurthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT