Published : 07 Jun 2021 12:15 PM
Last Updated : 07 Jun 2021 12:15 PM
கடந்த நிதியாண்டில் நாடு முழுவதும் கரோனா அலை கடுமையாக வீசியபோதிலும் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணம் செய்த 27.57 லட்சம் பேர் பிடிபட்டனர். எனினும் முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 25 சதவீதமாக குறைந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ரயில்வே வாரியத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதில் 2020- 21 நிதியாண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணம் செய்தவர்கள் விவரங்களை தருமாறு கோரி இருந்தார்.
இதற்கு ரயில்வே வாரியம் பதில் அளித்துள்ளது. அதில் கூறியுள்ளதாவது:
கடந்த 2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரையிலான நிதியாண்டில் நாடு முழுவதும் ரயிலில் உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்ததாக 27.57 லட்சம் பேர் பிடிபட்டனர். அவர்களுக்கு அபராதமாக ரூ.143.82 கோடி விதிக்கப்பட்டது.
நாடுமுழுவதும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு ரயில் போக்குவரத்து முடங்கியதால் இந்த எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கடந்த 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரையிலான நிதியாண்டில் இதேபோல் பயணச்சீட்டு இல்லாமல் 1.10 கோடி பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து ரூ.561.73 கோடி அபாரதமாக வசூலிக்கப்பட்டது.
கடந்த நிதியாண்டில் பயணச்சீட்டு இல்லாமல் பிடிபட்டோரின் எண்ணிக்கை 25 சதவீதமாக குறைந்ததற்கு கரோனா ஊரடங்கே காரணம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT